“2வது டெஸ்ட்டில் இந்தியா ஜெயிக்காத காரணமே கம்பீர்தான்”.. கில் டிக்ளேர் செய்வதை தடுத்ததாக சர்ச்சை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் டெஸ்ட், ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோருக்கு இடையே முக்கிய முடிவுகளை எடுப்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல முக்கிய தருணங்களில் கேப்டன் சுப்மன் கில்லின் முடிவுகளை கம்பீர் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. சுப்மன் கில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும், இதன் உச்சமாக இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற முடியாமல் போனதற்கு இந்த கருத்து வேறுபாடே முக்கிய காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை முன்கூட்டியே டிக்ளேர் செய்ய கேப்டன் சுப்மன் கில் விரும்பினார். ஆனால், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் சதம் அடிப்பதற்காக ஆட்டத்தை டிக்ளேர் செய்ய கம்பீர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

கம்பீரின் முடிவால் துருவ் ஜூரல் சதம் அடிக்கும் வரை ஆட்டம் நீட்டிக்கப்பட்டு, இறுதியில் இந்திய அணி 503 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்த தாமதமான டிக்ளேர் முடிவால், இலங்கையை வீழ்த்த இந்திய அணிக்கு போதிய நேரம் கிடைக்காமல் போனது. இறுதி நாளில் இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் அதிரடி சதத்தால் போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும், இந்தியா 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.
இந்த விவகாரம் குறித்து அப்போது போட்டியின் முடிவில் பேசிய சுப்மன் கில், "நாங்கள் மைதானத்தில் சுமார் 150 ஓவர்கள் வரை பந்துவீசினோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த முடிவையே எடுத்தோம்" என தனது பயிற்சியாளருக்கு ஆதரவாகப் பேசினாலும், அணியில் கம்பீரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தலைமை பயிற்சியாளருக்கும் இளம் கேப்டனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் அணியின் செயல்பாட்டை பாதிக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, மூத்த வீரர்கள் சிலர் கம்பீரின் பயிற்சி முறை குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடம் புகார் கூறியதாக ஒரு தகவல் வெளியானது. தற்போது கேப்டனுக்கே அணியில் சுதந்திரமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
