"என் டீமை ஏமாத்திக்கிட்டே இருக்கேன்..".. படுதோல்விக்கு பின் தன் மீதே பழியை போட்டுக்கொண்ட ZIM கேப்டன்
ஹராரே: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய பேட்ஸ்மேன்களின் திறமையைப் பாராட்டிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, கேப்டனாகத் தான் பேட்டிங்கில் சொதப்பி விட்டதாகத் தன் மீதே பழியை போட்டுக் கொண்டார்.
ஹராரேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் பெரிய ஸ்கோரை எட்டியது. இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இருந்தார். இவர்களின் ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

அடுத்து 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த படுதோல்விக்குப் பிறகு பேசிய ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, "எங்களது பந்துவீச்சாளர்கள் சில கட்டங்களில் நன்றாகப் பந்துவீசினர். ஆனால் இந்த (இந்திய அணியின்) வெற்றிக்கு முழு முதற்காரணம் இந்திய அணியின் அபார பேட்டிங் தான். இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்த சில ஷாட்களும், அவர்களின் பேட்டிங் திறமையும் உண்மையிலேயே வியக்க வைத்தன. எங்கள் அணியின் ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போதும் அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்" என்று பாராட்டினார்.
மேலும் தனது பேட்டிங் சொதப்பல் குறித்து பேசிய சிக்கந்தர் ராசா, "ஒரு கேப்டனாக பேட்டிங்கில் நான் தொடர்ந்து சொதப்பி அணியை ஏமாற்றி வருகிறேன். இது எங்களுக்குக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நல்ல பாடம். அடுத்த போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கடுமையாக முயற்சி செய்வேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.


Click it and Unblock the Notifications

