கராச்சி: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5ஆம் தேதி தொடங்கி நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேபோல் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். நெதர்லாந்து அணி ஏற்கனவே பெங்களூருவில் பயிற்சியை தொடங்கியுள்ளது.

அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி 4 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி செப்.29ஆம் தேதி உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. அதற்கு முன்பாக அணி வீரர்களின் ஒற்றுமைக்காக துபாயில் இரு நாட்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது பாகிஸ்தான் அணி நிர்வாகம்.
ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு இதுநாள் வரை மத்திய அரசு தரப்பில் விசா வழங்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்களின் துபாய் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து பிசிபி தரப்பில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இன்னும் 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும் என்று இழுத்தடிக்கிறார்கள்.

ஆனால் இதுவரை விசா வழங்கப்படவில்லை. பயிற்சி போட்டிகளுக்கு இன்னும் 4 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள சூழலில், வீரர்களிடையே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்போமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களுக்கே விசா வழங்கப்படுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டால், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கதியை நினைத்து அச்சம் அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு புதன்கிழமைக்குள் விசா வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியது. ஆனால் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணி ஐதராபாத் வரும் பட்சத்தில், ஒரேயொரு ஓய்வு கூட முழுமையாக இல்லாமல் பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விசா கிடைப்பதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக பாகிஸ்தானில் இருந்து யார் இந்தியாவுக்கு வந்தாலும் விசா வழங்குவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களாகும். ஏனென்றால் 3 அமைச்சகங்கள் எடுக்க வேண்டிய அது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவுக்கும் விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் வீரர்களின் விசா விவகாரத்தில் இந்தியா போதுமான கால அவகாசத்தை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது.