உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்.. 6 பந்தில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர்.. கேரி சோபர்ஸின் சாகசங்கள்
பார்படாஸ்: ஒரு அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன் 700-க்கும் அதிகமான ரன்களைக் குவிக்கிறார், சிறந்த பந்துவீச்சாளர் 20 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், சிறந்த ஃபீல்டர் 10 கேட்சுகளைப் பிடிக்கிறார், மேலும் அந்த அணியின் கேப்டன் ஐந்து டாஸ்களையும் வெல்கிறார். அந்த அணியை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? கடவுள் அந்த அணி பக்கமே ரூம் போட்டு தங்கி விட்டார் என்று தானே தோன்றும்.
இப்போது, மேலே சொன்ன இந்த எல்லாவற்றையும் ஒரே ஒரு தனிநபர் செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள். இன்று கேட்கும்போது இது ஒரு கற்பனைக் கதை போலத் தோன்றலாம். ஆனால், 1966-ல் ஒரு மனிதர் இந்தக் கற்பனையை நிஜமாக்கிக் காட்டினார். அவர்தான் சர் கார்பீல்ட் சோபர்ஸ்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கேப்டனாக இருந்த சோபர்ஸ் 722 ரன்கள் குவித்தார், 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார், 10 கேட்சுகளைப் பிடித்தார், மேலும் ஐந்து டாஸ்களையும் வென்றார். இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
1972-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக லெவன் அணி ஒரு தொடரில் விளையாடியது. அப்போது 36 வயதான சோபர்ஸ் உலக லெவன் அணியின் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவின் கடைசி பேட்ஸ்மேனான டென்னிஸ் லில்லி கிரீஸை நோக்கி நடந்தபோது, விக்கெட் கீப்பர் ஃபரூக் இன்ஜினியர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் தனது நிலையில் நின்றார். அப்போது சோபர்ஸ் ஃபரூக்கைப் பார்த்து, "சின்ன பையனே, இன்னும் இரண்டு அடிகள் பின்னால் போ. வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று இவருக்கு நான் காட்டப் போகிறேன்" என்றார்.
அதன்பிறகு வேகமாக ஓடிவந்து பந்துவீசிய சோபர்ஸ், அடுத்தடுத்து அசுர வேகத்தில் பவுன்சர்களை வீசி மிரட்டினார். இறுதியில் அந்த ஓவரின் கடைசி பந்தில் லில்லியை ஆட்டமிழக்கச் செய்தார். லில்லி மைதானத்தை விட்டு வெளியேறும்போது, அடுத்த இன்னிங்ஸில் இதேபோன்ற வேகப்பந்து வீச்சால் இதற்குப் பதிலடி கொடுப்பேன் என்று சோபர்ஸிடம் கூறினார்.
அதற்கு சோபர்ஸ் மென்னகை புரிந்தவாறே, "Iam Waiting" என்று துப்பாக்கி பட பஞ்ச் டைலக்கை கூறினார். அப்போது லில்லிக்கு வயது வெறும் 24, தனது உடற்தகுதியின் உச்சத்தில் இருந்தார். ஆனால் சோபர்ஸோ, லில்லிக்கு ஆறு வயதாக இருந்தபோதிலிருந்தே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய சோபர்ஸ், சொன்ன மாதிரியே 254 ரன்களைக் குவித்து அசத்தினார்.
1963-64 ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரின் போது, ஒரு முக்கியமான போட்டிக்கு முன்னதாக தெற்கு ஆஸ்திரேலியா அணி வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் டெட் டெக்ஸ்டர் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், அவரை எப்படி அவுட் செய்வது?, அந்த பேட்ஸ்மேனை எப்படித் தடுப்பது? போன்ற கேள்விகளே சுழன்றுகொண்டிருந்தன. ஒவ்வொரு முறை எப்படி என்ற கேள்வி எழும்போதும், ஒரு குரல் குறுக்கிட்டுப் பதில் சொன்னது: "நான் அவரை அவுட் செய்கிறேன்." "நான் ரன்களைக் குவிக்கிறேன்." என வந்தது.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ். தான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அவர் மைதானத்தில் நிரூபித்துக் காட்டினார். எதிரணி கேப்டன் பில் லாரி உட்பட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சோபர்ஸ், பின்னர் பேட்டிங்கில் 124 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, தெற்கு ஆஸ்திரேலியா அணி ஷெஃபீல்ட் ஷீல்டை வெல்ல உதவினார். அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் மற்றும் அதிக கேட்சுகள் பிடித்தவர் என அனைத்திலும் சோபார்ஸே முதலிடம் பிடித்தார்.
கடந்த 2000-ஆம் ஆண்டில், விஸ்டன் இதழ் டெஸ்ட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த 100 முன்னணி கிரிக்கெட் ஆளுமைகளிடம் 20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இதில் டான் பிராட்மேன் 100 வாக்குகளையும் பெற்றார். மற்றொரு புறம், வாக்களித்த 100 நடுவர்களில் 48 பேர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், சோபர்ஸ் 90 வாக்குகளைப் பெற்றார். வேறு எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் 30-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோபர்ஸ் பேட்டிங்கில் 58 சராசரியைக் கொண்டிருந்தார். ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசிய வரலாற்று சாதனைக்குச் சொந்தக்காரர். ஒரு இன்னிங்ஸில் 57 ஓவர்கள் வரை இடைவிடாது பந்துவீசும் அசாத்திய ஆற்றல் படைத்த போர் குதிரை இவர். இடதுகை வேகப்பந்து வீச்சு, இடதுகை சுழற்பந்து வீச்சு மற்றும் சைனாமேன் பந்துவீச்சு என அனைத்தையும் சர்வதேச அளவில் மிகச்சிறப்பாக வீசக்கூடிய பல திறமை அவரிடம் இருந்தது. கிரிக்கெட்டின் ஆல்பா மேல், ராக்கிங் ஸ்டார் என்றால், அது கேரி சோபர்ஸ் தான். சோபர்ஸ் மறைந்தாலும், கிரிக்கெட் உள்ள வரை, அவர் புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும்.


Click it and Unblock the Notifications

