"விராட் கோலியும், கம்பீரும் ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல்..".. உதவி கோச் சிதான்ஷூ கோடக் விளக்கம்
கார்டிஃப்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இடையே மோதல் இருப்பதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பர்மிங்காம் வலைப்பயிற்சியின் போது கோலியும் கம்பீரும் பேசிக் கொள்ளவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தன. ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து நீக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் கோலி - கம்பீர் இடையேயான விரிசல் செய்தி உண்மையாக இருக்கலாம் என கருதப்பட்டது.

இது குறித்துப் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "விராட் கோலியும், கம்பீரும் நேற்று மட்டுமே குறைந்தது 10 முறை பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருவரும் பேசுவதற்கு நடுவே யாரும் தேவையில்லை. இந்த வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என்றே எனக்குத் தெரியவில்லை" என்றார்.
மேலும், கோலியின் பேட்டிங் குறித்துப் பேசிய கோடக், "விராட் கோலி போன்ற மாபெரும் வீரர் பேட்டிங் செய்யும்போது நாம் தேவையின்றி தலையிடக் கூடாது. கால் அசைவு போன்ற சில குறிப்பிட்ட சந்தேகங்களை மட்டுமே அவர் என்னிடம் கேட்டார்.
நேற்று கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தின் நிலைமைகள் குறித்து அவரே டிரஸ்ஸிங் ரூமிற்கும், தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கும் ஒரு முக்கியத் தகவலை அனுப்பினார். ஆடுகளத்தில் 'ஷார்ட் பால்' பந்துகள் எதிர்பார்த்த வேகத்தில் வரவில்லை என்பதை அவர் களத்தில் இருந்தே கம்பீருக்குத் தெரியப்படுத்தினார். இதன் மூலம் அவர்கள் இருவரும் எவ்வளவு இணக்கமாகச் செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்" என்று விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் கோலி 65 ரன்கள் எடுத்திருந்தாலும், இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியடைந்தது. இதற்கிடையே, கோடக் அளித்துள்ள இந்த விளக்கம் கோலி - கம்பீர் இடையேயான மோதல் வதந்திகளுக்குப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications

