
நம்ப முடியாத ஆட்டம்
லார்ட்ஸில், கடந்த ஆக.12ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் உதவியுடன் 391 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை விட அந்த அந்த அணி 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். பிறகு நேற்று (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிரிக்கெட்டில் எப்போதாவது தான் ஆச்சர்யங்கள் நிகழும், அப்படியொரு ஆச்சர்யமாக இருவரது இன்னிங்ஸும் அமைந்தது.

மெகா வெற்றி
9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா விரைவில் ஆல் அவுட் ஆகி, இங்கிலாந்து ஜெயித்துவிடும் என்று இந்திய ரசிகர்களே நினைத்துக் கொண்டிருந்த போது, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது இந்திய அணி.

புதிய உச்சம்
இந்நிலையில், இந்த வெற்றிக்கு பிறகு ஒரு கேப்டனாக விராட் கோலி புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். அதாவது, உலகளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டன்கள் பட்டியலில் கோலி நான்காம் இடத்திற்கு முன்னேறினார். ஆம்! இதுவரை இந்திய டெஸ்ட் அணியை 63 போட்டிகளில் கேப்டனாக வழிநடாத்தியுள்ள விராட் கோலி, 37 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். இதில், 15 தோல்விகளும் அடங்கும். கோலியின் வெற்றி - தோல்வி ரேஷியோ 2.466.

பாண்டிங் நம்பர்.2
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித். 109 போட்டிகளில் தென்.ஆ., கேப்டனாக விளையாடியுள்ள ஸ்மித் அதில் 53 போட்டிகளை வென்றுக் கொடுத்துள்ளார். 29 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். அவரது வெற்றி - தோல்வி ரேஷியோ 1.827. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 77 போட்டிகளில் ஆஸி., கேப்டனாக விளையாடியுள்ள பாண்டிங், அதில் 48 போட்டிகளை வென்றுக் கொடுத்துள்ளார். 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். அவரது வெற்றி - தோல்வி ரேஷியோ 3.000.

தோனி
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக். 57 போட்டிகளில் ஆஸி., கேப்டனாக விளையாடியுள்ள ஸ்டீவ் வாக், அதில் 41 போட்டிகளை வென்றுக் கொடுத்துள்ளார். 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். அவரது வெற்றி - தோல்வி ரேஷியோ 4.555. இந்த பட்டியலில், இந்திய கேப்டன்களில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications