"விடைபெறுகிறேன்" 100 டெஸ்ட் போட்டியில் ஆடியதே போதும்.. 36 வயது இலங்கை ஓபனிங் பேட்ஸ்மேன் ஓய்வு
கல்லே: இலங்கை அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்கும் டிமுத் கருணாரத்னே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார். வரும் பிப்ரவரி 6 அன்று அந்த டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.
டிமுத் கருணாரத்னே தற்காலத்தின் இலங்கை அணியின் மிகச் சிறந்த துவக்க வீரராக இருந்தார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7172 ரன்களை சேர்த்து இருக்கிறார். 16 சதங்கள் மற்றும் 59 அரை சதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 39.40 ஆகும். கடந்த சில ஆண்டுகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல் கல்லை எட்ட இருக்கும் அவர் ,அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்து இருக்கிறார். இவர் 50 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவருக்கு இலங்கை ஒரு நாள் அணையில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மன நிறைவுடன் ஓய்வு பெறும் முடிவை எடுத்து இருக்கிறார். முன்னதாக அவர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடக்க வேண்டும் என்ற இலக்குடன் இருந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், தற்போது அவருக்கு 36 வயது ஆகிறது.
அந்த இலக்கை அவர் எட்ட வேண்டும் என்றால் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிக ரன்களை குவிக்க வேண்டும். ஆனால், தற்போது இலங்கை அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை என்பதால் அவரால் அந்த இலக்கை எட்ட முடியாமலும் போகலாம்.
எனவே, நூறு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய திருப்தியுடன் விடை பெற இருப்பதாக அவர் சக இலங்கை வீரர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அவரது ஓய்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவர் ஓய்வு பெற்ற பின் தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications