ஐயோ பாவம்.. ஒரு ரன்னில் மிஸ் ஆன சாதனை.. இலங்கை வீரர் மேத்தியூஸ் சோகம்
சாட்டடோகாம்: வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் கருணரத்னே 9 ரன்களில் ஆட்டமிழக்க, பெர்னான்டோ பொறுப்புடன் விளையாடி 36 ரன்கள் எடுத்தார்.
அதிரடி வீரர் குசல் மெண்டிஸ் பொறுமையாக விளையாடி 131 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். தனஞ்ஜெய் டி சில்வா 27 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களில் மட்டுமே எடுத்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் ஆஞ்சிலோ மேத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். 111 பந்துகளில் அரைசதம் விளாசிய மேத்தியூஸ், தொடர்ந்து நிதானமாக விளையாடி 183 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த தினேஷ் சந்திமால் 66 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போல் நின்று ஆடிய மேத்தீயூஸ் 150 ரன்களை கடந்தார். 2வது முறையாக இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மேத்தீயூஸ் 199 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இரட்டை சதம் பறிபோனது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 ரன்கள் மற்றும் 199 ரன்களில் ஆட்டமிழந்த ஒரே வீரர் என்ற சோக சாதனை மேத்தீயூஸ்க்கு கிடைத்தது. இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications