எவ்வளவு நேரமா வெயிட் பண்றது.. 'டைம் அவுட்' முறையில் அவுட்டான மேத்யூஸ்.. அதிர்ச்சியான இலங்கை அணி!
டெல்லி: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டிங் செய்ய முன் வராததால் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியின் 24.1வது பந்தில் இலங்கை அணியின் மிடில் ஆர்டர் வீரர் சமரவிக்ரமா 41 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.
எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.
ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மேத்யூஸ். இது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications