டெல்லி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற 280 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் 38வது லீக் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின் இலங்கை அணி தரப்பில் நிசாங்கா - குசல் பெரேரா கூட்டணி களமிறங்கியது. இதில் சொரிஃபில் இஸ்லாம் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே குசல் பெரேரா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் குசல் மெண்டிஸ் - நிசாங்கா கூட்டணி சேர்ந்து இலங்கை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. வழக்கம் போல் நிசாங்கா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ஆனால் கேப்டன் குசல் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, நிசாங்கா 41 ரன்களில் போல்டானார். இதனால் இலங்கை அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் சமரவிக்ரமா - அசலங்கா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் ரேட்டை சரியவிடாமல் ரன்கள் சேர்த்து வந்தனர். தவறான பந்துகளை பவுண்டரியாக மாற்றி இலங்கை அணி வீரர்கள் ரன்கள் சேர்த்தனர். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்தது. இதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமரவிக்ரமா ஷகிப் அல் ஹசன் பந்தில் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ், க்ரீஸிற்கு வருவதாக அதிக நேரம் எடுத்து கொண்டதால், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு பந்தை கூட சந்திக்காமல் டக் அவுட்டாகினார். இதனால் இலங்கை அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் முழு பொறுப்பையும் உணர்ந்து அசலங்கா சிறப்பாக விளையாடினார்.
விக்கெட் சென்றதால் பதற்றமடையாமல், அசால்ட்டாக சிக்சர்களை விளாசி அசத்தினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் 35 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து தனஞ்செயா டி சில்வா 34 ரன்களில் ஆட்டமிழக்க, 40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் சேர்த்தது. இதன்பின் வந்த தீக்சனா, அசலங்காவுக்கு கம்பெனி கொடுக்க, அவர் அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அசலங்கா தனது 2வது சதத்தை விளாசி அசத்தினார். அதன்பின் அசலங்காவும் 108 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் ஷகிப் 3 விக்கெட்டுகளையும், ஷகில் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.