மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் வென்று இருக்கிறது.
மூன்று போட்டிள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு வெறும் கையோடு செல்லக்கூடாது என்றும் எப்படியாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறியில் பயிற்சியாளர் ஜெயசூர்யா இலங்கை அணி வீரர்கள் மத்தியில் வேட்கை தீயை பற்ற வைத்தார். அது களத்தில் பட்டாசு போல் வெடித்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. இதில் தொடக்கவீரர் பென் டக்கட் 86 ரன்களும், கேப்டன் ஆலிப் போப் 154 ரன்கள் எடுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 13 ரன்கள், ஹாரி புரூக் 19 ரன்கள் ஜிம்மி ஸ்மித் 16 ரன்கள் என மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் மிலான் ரத்தின நாயகே மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை அடுத்து இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது.
இதில் நிஷாங்கா 64 ரன்களும், கேப்டன் தனஞ்செய் செல்வா 69 ரன்களும், கமெண்டு மென்டிஸ் 64 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சாதிக்காததால் இலங்கை அணி 263 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ஜாஸ் ஹால் மற்றும் ஆலிஸ் ஸ்டோன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை அடுத்து 62 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் இலங்கை அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அதிகபட்சமாக ஜாமி ஸ்மித் 67 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
தொடக்க வீரர் டான் லாரன்ஸ் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 34 ஓவரில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை அணியின் லகிரு குமாரா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இலங்கை களமிறங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் இலங்கையின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அங்குதான் டிவிஸ்ட் ஒன்று நடந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா அபாரமாக விளையாடி 127 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
13 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 124 பந்துகளில் அவர் 127 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100க்கு மேல் இருந்தது. இதேபோன்று குசல் மெண்டிஸ் 39 ரன்களும் ஏஞ்சலா மேத்தீஸ் 32 ரன்களும் சேர்க்க இலங்கை அணி 40.3 ஓவரில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இலங்கை அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் வெற்றியை ருசித்து இருக்கிறது.
இதனால் ஆறுதல் வெற்றியுடன் இலங்கை அணியினர் தாயகம் செல்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் எதிராக மூன்று டெஸ்ட், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் என தொடர்ந்து ஐந்து டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து வெல்லும் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இலங்கை அணியினர் பெரிய ஷாக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.