டி20 கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத படுமோசமான பேட்டிங் சாதனையை செய்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா ஒரு மோசமான உலக சாதனையைத் தனது பெயரில் பதிவு செய்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர் என்ற சோகமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, கேப்டன் தசுன் ஷனகா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

கோல்டன் டக் ஆனது எப்படி?
போட்டியின் 19வது ஓவரில் களமிறங்கிய தசுன் ஷனகா, இடுப்பு உயரத்திற்கு வந்த ஒரு ஃபுல் டாஸ் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டின் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் தேர்ட் மேன் திசையில் நின்ற மார்க் அடைர் கைகளில் தஞ்சம் புகுந்தது.
பந்து இடுப்புக்கு மேல் சென்றதால் அது 'நோ-பால்' ஆக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் பந்துவீச்சை ஆய்வு செய்தபோது, அது இடுப்பிற்குக் கீழே 16 சென்டிமீட்டர் தாழ்வாகச் சென்றது தெரியவந்தது. இதனால், ஷனகா 'கோல்டன் டக்' ஆகி வெளியேறினார்.
புதிய உலக சாதனை
இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தசுன் ஷனகா ஆட்டமிழந்த 16வது டக்-அவுட் ஆகும். இதன் மூலம், ருவாண்டா வீரர் ஸாப்பி பிமென்யிமானாவின் (15 டக்-அவுட்கள்) சாதனையை முந்தி, டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர் என்ற படுமோசமான சாதனையை ஷனகா படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக டக்-அவுட்கள்:
- தசுன் ஷனகா (இலங்கை) - 113 இன்னிங்ஸ், 16 டக் அவுட்கள்
- ஸாப்பி பிமென்யிமானா (ருவாண்டா) - 62 இன்னிங்ஸ், 15 டக் அவுட்கள்
- பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) - 159 இன்னிங்ஸ், 14 டக் அவுட்கள்
- சௌமியா சர்க்கார் (வங்கதேசம்) - 86 இன்னிங்ஸ், 13 டக் அவுட்கள்
- சி. சட்பைசான் (தாய்லாந்து) - 52 இன்னிங்ஸ், 13 டக் அவுட்கள்
T20 WC: இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? பாகிஸ்தான் அணி நிலை என்ன?
இலங்கை - அயர்லாந்து போட்டிச் சுருக்கம்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, குசால் மெண்டிஸின் அபாரமான அரைசதத்தாலும் (56*), கமிந்து மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தாலும் (44) 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டக்-அவுட் ஆனாலும், அணி வெற்றி பெற்றது இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகளில் ஒன்றாக இருக்கும் இலங்கை அணி ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளை பெற்று தான் இடம் பெற்றுள்ள குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications