SL vs IRE: 38 ரன்னுக்கு 8 விக்கெட் காலி.. அயர்லாந்தை சுருட்டிய இலங்கை.. கொழும்பில் புதிய வரலாறு
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்ற குரூப் பி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. வெற்றியின் விளிம்பில் இருந்த அயர்லாந்து அணி, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களின் அனுபவத்தால் மளமளவென விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.
கொழும்பில் புதிய வரலாறு
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற கடந்த 9 சர்வதேச டி20 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி தோல்வியையே சந்தித்து வந்தது. ஆனால், அந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (56)* நங்கூரம் போல நிலைத்து நின்றார். கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 19 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய அவரது ஆட்டத்தால், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

வெற்றியை நோக்கிச் சென்ற அயர்லாந்து
164 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ராஸ் அடைர் (34) மற்றும் ஹாரி டெக்டர் (40) ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததால் அயர்லாந்து எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஹசரங்கா போட்ட முடிச்சு.. சரிந்த அயர்லாந்து
ஆட்டத்தின் 15வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அயர்லாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர்.வனிந்து ஹசரங்கா காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்ட போதிலும், முக்கிய 3 விக்கெட்டுகளை (டெக்டர், டக்கர், கேம்பர்) வீழ்த்தினார். மகேஷ் தீக்ஷனா தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்து அயர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.
மோசமான சாதனை
105 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையிலிருந்து, அடுத்த 38 ரன்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் அயர்லாந்து அணி பறிகொடுத்தது. இறுதியில் 19.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 100 ரன்களுக்கு மேல் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, பின்னர் இவ்வளவு வேகமாகச் சரிந்த அணி என்ற மோசமான பெயரை அயர்லாந்து பெற்றது.


Click it and Unblock the Notifications