டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய மெண்டிஸ்.. தொடர்ந்து 8வது அரைசதம்.. இலங்கையின் புது ரன் மெஷின்!
காலே: இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ந்து 8 அரைசதங்கள் விளாசி கமிண்டு மெண்டிஸ் புதிய வரலாறு படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக இலங்கை அணியின் கமிண்டு மெண்டிஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பெற்ற இலங்கை அணிக்கு, 2வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணி இன்று களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் நிசாங்கா - கருணரத்னே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் ஓவரிலேயே நிசாங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், கருணரத்னே - சண்டிமாஸ் கூட்டணி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதானமாக விளையாடிய கருணரத்னே 109 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் மேத்யூஸ் - சண்டிமாஸ் இணை நியூசிலாந்து பவுலர்களை ஒரு கை பார்த்தது. இவர்களை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் சோர்ந்து போயினர்.
சிறப்பாக ஆடிய சண்டிமாஸ் 208 பந்துகளில் 16 பவுண்டரிகள் உட்பட 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் மேத்யூஸ் - கமிண்டு மெண்டிஸ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் ரன் குவிப்பை தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை சேர்த்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிண்டு மெண்டிஸ் 56 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 51 ரன்கள் விளாசினார். அதேபோல் மேத்யூஸ் 166 பந்துகளில் 78 ரன்களை சேர்த்துள்ளார்.
இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக இலங்கை அணியின் இளம் வீரர் கமிண்டு மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதாவது அறிமுகமான போட்டி முதல் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை கமிண்டு மெண்டிஸ் படைத்துள்ளார். இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சாவுத் சக்கீல் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதற்கு முன்பாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இதன் மூலமாக இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ரன் மெஷினை கண்டுபிடித்துள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கமிண்டு மெண்டிஸ் 4 சதங்கள், 4 அரைசதங்கள் 822 ரன்களை விளாசியுள்ளார். இதனால் விரைவாக ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கமிண்டு மெண்டிஸால் படைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னும் பல்வேறு சாதனைகளையும் அவர் படைப்பார் என்றும் அந்நாட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications