டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு.. அடுத்த டான் பிராட்மேன்? இலங்கை வீரர் கமிந்து மென்டிஸ் அபாரம்
கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி வரும் அதே வேளையில், இலங்கை பேட்ஸ்மேன் ஒருவர் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்து இருக்கிறார் இலங்கை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ்.
இதுவரை ஏழாம் வரிசையில் களமிறங்கி அவர் தொடர்ந்து ஆறு போட்டிகளில் பத்து முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். இதை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த முறையும் சிறப்பாக ஆடிய அவர் 173 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அவரது சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 305 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் கமிந்து மென்டிஸ் டான் பிராட்மேனுக்கு இணையான சாதனைகளை செய்து இருப்பதாக பாராட்டுக்களை குவித்து வருகிறார். இதுவரை 11 இன்னிங்க்ஸ் மட்டுமே ஆடி உள்ள கமிந்து மென்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 809 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது சராசரி 80.9 ஆக உள்ளது.
தற்போது கிரிக்கெட் ஆடிவரும் வீரர்களில் அதிக சராசரி கொண்ட பட்டியலில் கமிந்து மென்டிஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், தங்களின் முதல் 11 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்ற சில வீரர்கள் பிற்காலத்தில் பெரிய அளவுக்கு புகழ் பெறாமலும் போய் உள்ளனர். அதில் ஒருவர் தான் வினோத் காம்ப்ளி. அவர் முதல் 11 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 937 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்த சில போட்டிகளுக்கு பின் அவர் இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். மறுபுறம், சுனில் கவாஸ்கர் தனது முதல் 11 இன்னிங்க்ஸ்களில் 888 ரன்கள் சேர்த்திருந்தார். அப்போது அவரது சராசரி 111 ஆக இருந்தது. ஆனால், அவரது ஓய்வின் போது அவரது சராசரி 51 ஆக இருந்தது.
எனவே, இப்போது அதிக சராசரி வைத்துள்ள கமிந்து மென்டிஸ் பிற்காலத்தில் ஃபார்ம் இழந்து சரிவை சந்திக்கவும் நேரிடலாம். ஆனாலும், அவர் தரமான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவர் பலவீனமான அணிகளுக்கு எதிராக மட்டுமின்றி பலமான அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ரன் குவித்து இருக்கிறார். ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தற்போது நியூசிலாந்து என நான்கு அணிகளுக்கு எதிராக அவர் இந்த சாதனையை செய்திருக்கிறார்.
இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு அரை சதமும், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு சதம், ஒரு அரை சதமும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு சதம், இரண்டு அரை சதங்களும் அடித்திருக்கிறார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்திருக்கிறார். இந்திய அணியில் இவருக்கு ஈடான இடம் வீரராக ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருக்கிறார். ஜெய்ஸ்வாலின் டெஸ்ட் சராசரி தற்போது 68.53 ஆக உள்ளது. கமிந்து மென்டிஸ்-இன் டெஸ்ட் சராசரி 80.9 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications