கல்லே: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெறும் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்கள் குவித்து இருந்த நிலையில், முதல் இன்னிங்க்ஸில் 514 ரன்கள் முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.
இலங்கை அணியின் மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி நியூசிலாந்து அணியை 39.5 ஓவர்களில் ஆல் அவுட் செய்து இருந்தனர். அதிலும் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷாந்த் பெய்ரிஸ் ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே 36 ஓவர்களை வீசினர். அஸிதா பெர்னான்டோ 4 ஓவர்களை மட்டுமே வீசி இருந்தார்.

இலங்கை அணியின் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து வீரர்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 10, டேரில் மிட்செல் 13, மிட்செல் சான்ட்னர் 29 ரன்கள் சேர்த்தனர். இந்த மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் 53 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடி இருந்தார். 50 பந்துகளை தாண்டி களத்தில் நின்றும் அவரால் ரன் சேர்க்க முடியவில்லை. கடைசி நேரத்தில் சான்ட்னர் ஓரளவு ரன் சேர்த்தார். அவர் 51 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்களும், நிஷான் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். பெர்னாண்டோ ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். முன்னதாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 602 எடுத்து டிக்ளேர் செய்து இருந்தது. அடுத்து நியூசிலாந்து அணியை 88 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததால், முதல் இன்னிங்ஸில் 514 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதிக ரன்கள் முன்னிலை பெற்றதன் காரணமாக இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் தடுமாறிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. ஒரு ரன் கூட சேர்க்காத நிலையில் துவக்க வீரர் டாம் லாதம் டக் அவுட் ஆகி வெளியேறினார். இலங்கை அணியின் நிஷாந்த் பெய்ரிஸ் மற்றும் பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இருந்து இடைவிடாமல் பந்து வீசினர்.