காலே : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.
காலேயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தினேஷ் சந்திமால், 116 ரன்கள் குவிக்க அந்த அணியின் இளம் நட்சத்திர வீரர் கமிண்டு மெண்டிஸ் 182 ரன்கள் விளாசினார்.

இறுதியில் குசல் மெண்டிஸ் 106 ரன்கள் எடுக்க இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யாவின் அபார பந்துவீச்சில் சிக்கி சின்னாபின்னமான நியூசிலாந்து அணி 88 ரன்களில் சூழ்ந்தது. அந்த அணியில் மிட்செல் சாண்டனர் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 514 ரன்கள் பின் தங்கிய நியூசிலாந்த அணி ஃபாலோவான் பெற்று மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர்கள் ஒரு அளவுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வில்லியம்சன் 46 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 78 ரன்கள், டாம் பிளண்டல் 60 ரன்களும், மிச்சல் சான்ட்நர் 67 ரன்கள் எடுத்தனர். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மேலும் பெரிய இன்னிங்ஸை யாரும் விளையாடவில்லை.
இதனால் நியூசிலாந்து அணி 81.4 ஓவர்கள் எதிர்கொண்டு 360 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை அணியின் நிஷான் பெர்ரிஸ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 55-வது சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் வெறும் ஏழு வெற்றி புள்ளிகள் தான் வித்தியாசமாக இருக்கிறது. இந்த சூழலில் இலங்கை அணி எஞ்சிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோத அதிக வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.