காலே: இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 4வது நாள் ஆட்டம் நேர முடிவில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 68 ரன்கள் தேவையாக உள்ள நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே போதுமானதாக உள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 305 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 340 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக 35 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 3வது நாள் ஆட்டம் நேரம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின் அடுத்த நாள் இரு அணிகளுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கையில் தேர்தல் நடைபெற்றதால், இலங்கை அணி வீரர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்களிப்பதற்காக ஓய்வு அளிக்கப்பட்டது.
16 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் இடையில் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அதில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி 309 ரன்களுக்கு சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து டாம் லேதம் - கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
2வது ஓவரிலேயே கான்வே 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கேன் வில்லியம்சன் - லேதம் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பிரபத் ஜெயசூர்யா சுழலில் ஏமாந்த வில்லியம்சன் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களில் லேதமும் 28 ரன்களில் வெளியேறினார். இதன்பின் ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க, மறுமுனையில் வந்த மிட்சல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த பிளெண்டல் 30 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 4 ரன்களிலும், சான்ட்னர் மற்றும் கேப்டன் சவுதி தலா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் நடுவே எதிர்முனையில் நின்ற வீரர்களுக்கு ஸ்ட்ரைக்கை அதிகம் கொடுக்காமல் ரச்சின் ரவீந்திரா பவுண்டரிகள் மூலமாக ரன்களை குவித்து வந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் 4வது நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 158 பந்துகளில் ஒரு சிக்ஸ், 9 பவுண்டரிகள் உட்பட 91 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 68 ரன்களும், இலங்கை அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவையாக உள்ளது. 5வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பிரபத் ஜெயசூர்யா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் இருவரின் பவுலிங்கை சமாளிப்பார்களா என்பதே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.