ஒரேயொரு வார்த்தை தான் ட்ராட் சொன்னார்.. ஒட்டுமொத்தமாக எல்லாம் மாறிவிட்டது.. ஆஃப்கான் கேப்டன் ஷாகிதி!
புனே: எங்கள் பயிற்சியாளர் ஜானத்தன் ட்ராட் கூறிய ஒரேயொரு வார்த்தை தனது மனநிலையை மொத்தமாக மாற்றியதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஒமர்சாய் 73 ரன்களும், ரஹ்மத் ஷா 62 ரன்களும், ஷாகிதி 58 ரன்களும் விளாசி அசத்தினர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 3வது வெற்றியை பெற்றுள்ளதோடு, புள்ளிப்பட்டியலிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி பேசுகையில், எங்கள் அணியை நினைத்து பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று 3 துறைகளிலும் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பவுலர்களின் செயல்பாடுகள் தரமாக இருந்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி, எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள்.
குறிப்பாக எங்கள் பயிற்சியாளர் ஜானத்தன் ட்ராட் எங்களுக்கு உற்சாகம் அளித்து கொண்டே இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக ஜானத்தன் ட்ராட் கூறிய வார்த்தை, எனது மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியது. ஒரு கேப்டனாக நான் அணியை முன்நின்று சிறப்பாக விளையாடி வழிநடத்த வேண்டும். அதனை ஒவ்வொரு போட்டியிலும் செய்ய முயற்சிக்கிறேன். இதேபோல் இனி வரும் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ரஷீத் கான் எங்களின் ஸ்பெஷல் வீரர். உலகின் தலைசிறந்த வீரரும் கூட. களத்தில் உற்சாகம் குறையாமல் துள்ளலுடன் இருப்பவர். ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் மைதானத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு வழங்கிய இந்திய ரசிகரக்ளுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications