ஹராரே: ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹாராரேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிசான் மதுஷ்கா 13 பந்துகளை எதிர் கொண்டு டக் அவுட் ஆனார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு பதும் நிஷாங்காவுடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியினை சரிவில் இருந்து மீட்டனர். குசல் மெண்டிஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய பதூம் நிஷாங்கா 76 ரன்கள் எடுத்தார்.

இதை போன்று சதிரா சமரவிக்ரமா 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் அசலங்கா 6 ரன்களில் வெளியேற, இறுதியில் ஜனித் லியாங்கே அதிரடியாக விளையாடி ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர் என 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதைப்போன்று கமிண்டு மெண்டீஸ் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி,இரண்டு சிக்சர்கள் அடங்கும்.
இதன் மூலம் 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்க்கு இலங்கை அணி 298 ரன்கள் எடுத்திருந்தது. இதை அடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க வீரர் டக் அவுட் ஆகியும் பிராண்டன் டைலரும் ரன் எதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் 0 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பெண் கரன் மற்றும் சென் வில்லியம்ஸ் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினர். சாம் காரனின் சகோதரரான பென் கரன் 90 பந்துகளை எதிர் கொண்டு 70 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் சென் வில்லியம்ஸ் 57 ரன்கள் எடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டம் இழந்தனர். எனினும் சிக்கந்தர் ராசா மட்டும் அபாரமாக விளையாடி ஜிம்பாப்வே அணியை வெற்றியின் அருகே அழைத்து சென்றார். கடைசி ஓவரில் வெறும் ஒன்பது ரன்கள் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது.
அப்போது பந்துவீசிய மதுசங்கா முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 92 ரன்கள் எடுத்திருந்த சிக்கந்தர் ராசா முதல் பந்தில் ஆட்டமிழக்க பிராண்ட் எவன்ஸ் இரண்டாவது பந்திலும், ரிச்சர்ட் மூன்றாவது பந்திலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய மதுசங்கா மொத்தம் நான்கு விக்கெட்டுகளை இந்த போட்டியில் வீழ்த்தினார்.