மும்பை : சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் கர்நாடகா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 90 ரன்களில் ஆட்டம் இழந்து படுதோல்வியை தழுவியது. இந்தூரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் கர்நாடகா அணியுடன் தமிழ்நாடு அணி பல பரிட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்த களம் இறங்கிய பாபா இந்திரஜித் ஐந்து ரன்களிலும், நாராயண் ஜெகதீசன் டக் அவுட்டாகியும் வெளியேறினார். பூபதி குமார் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க குஜராத் அணியால் தக்கவைக்கப்பட்டிருக்கும் ஷாருக்கான் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அணியின் புதிய வீரர் விஜய் சங்கர் பேட்டிங்கில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அவர் டக் அவுட் ஆனார். முஹம்மது அலி 15 ரன்களிலும், ரித்திக் ஈஸ்வரன் 12 ரன்களிலும், சாய் கிஷோர் இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
கே கே ஆர் அணியில் இடம் பெற்றிருக்கும் வருண் சக்கரவர்த்தி பேட்டிங்கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் கர்நாடக அணியில் இடம் பெற்றிருக்கும் சிஎஸ்கே வீரர் ஸ்ரேயாஸ் கோபால் நான்கு ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய மணிஷ் பாண்டே 42 ரன்களும், மாயங் அகர்வால் 30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதன் மூலம் கர்நாடகா அணி 11.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதில் தமிழக அணி சார்பாக களமிறங்கிய சிஎஸ்கே வின் புதிய வீரர் குர்ஜன்பிரித் சிங் இரண்டு ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.மற்றொரு கே கே ஆர் வீரர் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.