SMAT 2025: மரண அடி அடித்த ப்ரித்வி ஷா.. 23 பந்தில் அரைசதம்.. ஐபிஎல் ஏலத்துக்கு முன் வெறியாட்டம்
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடருக்கு முன் எந்த அணியும் தன்னை ஏலத்தில் எடுக்காத வேதனையில் இருந்த ப்ரித்வி ஷா, தற்போது 2026 ஐபிஎல் ஏலத்துக்கு முன் களத்தில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2026 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே, வெறும் 23 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டியுள்ளார்.
மும்பை அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ப்ரித்வி ஷா, இந்தச் சீசனில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் காட்டிய அதிரடி, விமர்சகர்களின் வாயை அடைக்கும் வகையில் இருந்தது.

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி மகாராஷ்டிரா களமிறங்கியது.
தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் களமிறங்கிய ப்ரித்வி ஷா, முதல் பந்திலிருந்தே ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 8 பவுண்டரிகள் மற்றும் 2 இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்ட அவர், வெறும் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். 9-வது ஓவரில் ஒரு சிங்கிள் தட்டிவிட்டு இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
கேப்டன் பதவி கிடைத்தது எப்படி?
மகாராஷ்டிரா அணியின் வழக்கமான கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் அவர் சையது முஷ்டாக் அலி தொடரிலிருந்து விலகினார். இதன் காரணமாக, கேப்டன் பொறுப்பு ப்ரித்வி ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனது முதல் போட்டியில், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார் ப்ரித்வி ஷா. ஆனால், கேப்டனாகப் பொறுப்பேற்ற உடனேயே பொறுப்புடனும், அதே சமயம் தனது இயல்பான அதிரடியுடனும் விளையாடி அணியை முன்னின்று வழிநடத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் ப்ரித்வி ஷாவை வாங்க முன்வரவில்லை. 'அன்சோல்ட்' (Unsold) ஆன விரக்தியில் இருந்த ப்ரித்வி ஷா, ரஞ்சி ட்ராபியில் ஏற்கனவே ஒரு இரட்டை சதம் உட்பட 470 ரன்கள் குவித்திருந்தார். தற்போது டி20 போட்டிகளிலும் தான் இன்னும் ராஜா தான் என்பதை இந்த இன்னிங்ஸ் மூலம் நிரூபித்துள்ளார்.
இதன் மூலம் 2026 ஐபிஎல் ஏலத்துக்கு முன் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் செய்தி அனுப்பி உள்ளார். எந்த அணியாவது அவரை ஏலத்தில் வாங்குமா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications