SMAT 2025: ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் சதம்.. சர்ஃபராஸ் கான் 18 பந்தில் அரைசதம்.. கெத்து காட்டிய மும்பை
புனே: சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய நான்காவது சதத்தை அவர் அடித்திருக்கின்றார். புனேவில் நடைபெற்ற சூப்பர் லீக் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் ஹரியானா அணியை மும்பை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஹரியானா அணியில் கேப்டன் அன்கீத்குமார் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், 10 பவுண்டர்களும் அடங்கும்.

இதேபோன்று முன்னாள் சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சித்து 38 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். இதனால் ஹரியானா அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து இருந்தது. இதனை அடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மற்றும் ரஹானே களமிறங்கினர். ரஹானே 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து ஹரியானா பந்துவீச்சை சிதறடித்தனர். இருவரும் சிக்சர் பவுண்டரி என போட்டி போட்டுக் கொண்டு விளையாடினர். இதனால் சர்பராஸ் கான் 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 64 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 256 என்ற அளவில் இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு சர்பராஸ் கான் தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார்.
மறுபுறம் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காமல் உள்ள ஜெய்ஸ்வாலும் தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார். 48 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய நான்காவது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். இதில் 16 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதனால் மும்பை அணி 17.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜ் நான்கு ஓவர்கள் வீசி 63 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.


Click it and Unblock the Notifications