"ஐபிஎல்-க்கு நான் லாயக்கு இல்லையா?.. இந்த அடி போதுமா".. 47 பந்தில் சதம் விளாசிய சர்ஃபராஸ் கான்
லக்னோ: 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் தன்னை கண்டுகொள்ளாத நிலையில், வரவிருக்கும் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக தனது விஸ்வரூபத்தை காட்டியுள்ளார் சர்ஃபராஸ் கான். இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கியதற்கும் சேர்த்து பேட்டால் பதில் கூறி இருக்கிறார். சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆடி வரும் சர்ஃபராஸ் கான், டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து ஏலத்துக்கு முன் ஐபிஎல் அணிகளுக்கு செய்தி அனுப்பி இருக்கிறார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை மற்றும் அசாம் அணிகள் மோதிய ஆட்டம் லக்னோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், சமீபத்தில் சதம் அடித்து மிரட்டிய இளம் வீரர் ஆயுஷ் மத்ரே விரைவிலேயே ஆட்டமிழந்தார்.

47 பந்தில் மிரட்டல் சதம்
இதையடுத்து 3-வது வீரராக களமிறங்கிய சர்ஃபராஸ் கான், ஆரம்பத்தில் நிதானமாகத் தொடங்கினாலும், பின்னர் அதிரடி ஆட்டம் ஆடினார். அசாம் பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 47 பந்துகளில் 100 ரன்கள் குவித்து தனது முதல் டி20 சதத்தைப் பதிவு செய்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்ஸர்கள் அடங்கும்.
மும்பை அணியில் இடம் பெற்று இருக்கும் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த சர்ஃபராஸ், மும்பை அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தார்.
2026 ஐபிஎல் ஏலத்தில் விலை போவாரா?
கடந்த ஐபிஎல் ஏலத்தில் சர்ஃபராஸ் கானை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. ரஞ்சி கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலக்கினாலும், டி20 ஃபார்மெட்டில் அவர் மீது நம்பிக்கை குறைவாகவே இருந்தது. அவர் டி20 போட்டிக்கு ஏற்ற பேட்ஸ்மேன் இல்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால், தற்போது அடித்துள்ள இந்த அதிரடி சதம் காரணமாக, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடக்கவுள்ள 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் அவருக்கு மவுசு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ள சர்ஃபராஸ், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் இந்த சதம் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளின் கவனத்தை நிச்சயம் ஈர்த்திருக்கும்.
இஷான் கிஷன், படிக்கல் அதிரடி
இதேபோல், ஜார்கண்ட் அணிக்காக ஆடிய இஷான் கிஷன், சௌராஷ்டிராவுக்கு எதிராக 50 பந்துகளில் 93 ரன்கள் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசி சதத்தை நூலிழையில் தவறவிட்டார். மற்றொரு போட்டியில் கர்நாடகா வீரர் தேவ்தத் படிக்கல், தமிழ்நாடு அணிக்கு எதிராக 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்து மிரட்டினார். ஐபிஎல் ஏலம் நெருங்கும் வேளையில், இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications