ஐபிஎல் ஏலம் தந்த வலி.. உலகிலேயே எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்த ஊர்வில் பட்டேல்.. 2 அதிரடி சதம்
இந்தூர்: 2025 ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் இடம் பிடித்த குஜராத் வீரர் ஊர்வில் பட்டேல் அனைத்து ஐபிஎல் அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். எந்த அணியும் அவரை ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஏலம் முடிந்த சில நாட்களிலேயே அவர் சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் 28 பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்து இருந்தார்.
அதுவே சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்தது. அந்த சதம் அடித்து ஆறு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார் ஊர்வில் பட்டேல்.

ஆறு நாட்கள் இடைவெளியில் இரண்டு அதிவேக சதம் அடித்து இருக்கிறார். அதிலும் இந்த இரண்டு சதங்களும் 37 பந்துகளுக்குள் அடிக்கப்பட்ட சதங்களாகும். உலகிலேயே எந்த ஒரு டி20 பேட்ஸ்மேனும் இரண்டு முறை 37 பந்துகளுக்கும் குறைவான பந்துகளை சந்தித்து சதம் அடித்தது இல்லை.
இந்த இமாலய சாதனையை ஊர்வில் பட்டேல் படைத்து இருக்கிறார். ஒருவேளை சையது முஷ்டாக் அலி தொடரின் பெரும்பாலான போட்டிகள் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு நடந்து இருந்தால் ஊர்வில் பட்டேலின் திறமையை ஐபிஎல் அணிகள் கவனித்து இருக்கக்கூடும்.
ஆனால், தற்போது ஐபிஎல் ஏலத்தில் ஏற்பட்ட வலியை துடைக்கும் வகையில் அவர் ஆறு நாட்கள் இடைவெளியில் இரண்டு அதிவேக சதங்களை அடித்து இருக்கிறார். இந்த இரண்டு சதங்களும் ஒரே மைதானத்தில் அடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு நாட்களுக்கு முன்பு திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் அவர் 28 பந்துகளில் சதம் கடந்து பின்னர் 35 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தற்போது உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 41 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து இருக்கிறார். இந்த போட்டியிலும் அவர் ஆட்டம் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாக ஓராண்டுக்கு முன்பு உள்ளூர் ஒருநாள் போட்டி ஒன்றில் அருணாச்சல் பிரதேச அணிக்கு எதிராக 41 பந்துகளில் சதம் அடித்து இருந்தார்.
ஊர்வில் பட்டேல் தொடர்ந்து அதிரடி சதங்களை அடித்து வரும் நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கு முன் ஏதேனும் ஒரு உள்ளூர் வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக இடம்பெற வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications