உலகிலேயே யாரும் செய்யாத மெகா சாதனையை செய்த ஸ்மிருதி மந்தனா.. 4 வெவ்வேறு ஆண்டுகளில் 500 ரன் குவிப்பு
துபாய்: இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் தலா 500 ரன்களுக்கு மேல் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
துபாயில் நடந்த 2026 மகளிர் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடிய மந்தனா, 64 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்தார். இவரது அபார ஆட்டத்தால் ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில் தனது 2வது தொடர் வெற்றியை பதிவு செய்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

நடப்பு 2026ம் ஆண்டில் இதுவரை 16 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள மந்தனா 579 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் 2018ல் 622 ரன்கள், 2022ல் 594 ரன்கள் மற்றும் 2024ல் 763 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் 4 வெவ்வேறு ஆண்டுகளில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றார்.
முன்னதாக இலங்கையின் சமாரி அட்டபட்டு, தென் ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட், யுஏஇ அணியின் இஷா ஓசா, இந்தியாவின் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 3 ஆண்டுகளில் 500 ரன்களை கடந்திருந்தனர். தற்போது அவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி மந்தனா புதிய வரலாறு படைத்துள்ளார்.
மேலும், 302 சர்வதேச போட்டிகளில் விளையாடி 93 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை மந்தனா சமன் செய்தார். மிதாலி ராஜ் தனது 23 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
மேலும், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10,880 ரன்கள் குவித்த மந்தனா, அதிக சர்வதேச ரன் எடுத்தவர் மற்றும் 18 சதங்கள் விளாசியவர் என்ற உலக சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். சர்வதேச டி20 அரங்கில் 600 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார். அடுத்தடுத்து உலக சாதனைகளை படைத்து வரும் மந்தனா, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

