"இந்திய அணியை வழிநடத்துவது பெரும் பாக்கியம்".. கேப்டனான பின் ஸ்மிருதி மந்தனா உருக்கமான பேச்சு!
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தாய்நாட்டை வழிநடத்துவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணியின் அனைத்து வடிவ கேப்டனாக இருந்த ஹர்மன்பிரீத் கவுர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா அனைத்து வடிவ போட்டிகளுக்கும் இந்திய அணியின் புதிய கேப்டனாக பிசிசிஐயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றது குறித்துப் பேசிய ஸ்மிருதி மந்தனா கூறுகையில், "இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கவுரவமாகும். இந்திய நாட்டிற்காக விளையாடுவதே எனக்கு எப்போதும் பெருமைக்குரிய விஷயம். தற்போது கேப்டனாக அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதை வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாப்பேன். என் மீது முழு நம்பிக்கை வைத்த பிசிசிஐ, தேர்வுக்குழு மற்றும் எனது சக வீராங்கனைகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக இந்திய அணியை அர்ப்பணிப்புடன் வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுரின் அளப்பரிய பங்களிப்பை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நமது அணியின் வெற்றிப் பயணத்தில் அவரது தலைமைத்துவம் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தப் புதிய பொறுப்பின் முக்கியத்துவத்தை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எனது முழு உழைப்பையும் வழங்குவேன்" என்று அவர் தெரிவித்தார்.
ஸ்மிருதி மந்தனா ஏற்கனவே இந்திய அணியை 22 சர்வதேச போட்டிகளில் வழிநடத்தி 15 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இதற்கிடையே அடுத்து நடக்க இருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி20 அணிக்கு ஷஃபாலி வர்மாவும், ஒருநாள் அணிக்கு தீப்தி சர்மாவும் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்மன்பிரீத் கவுர் ஒரு வீராங்கனையாக அணியில் தொடர்ந்து விளையாட உள்ளார்.


Click it and Unblock the Notifications

