Smriti Mandhana: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை..ரோகித் ரெக்கார்ட் முறியடிப்பு
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாபுதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். டர்பனில் நடைபெற்ற இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் அதிக டி20 ரன்கள் குவித்த இந்தியராக, ரோஹித் சர்மாவை முறியடித்துள்ளார்.
மந்தனா தனது 155-வது இன்னிங்ஸில் மொத்தம் 4,244 ரன்களை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் 14 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். ரோஹித் சர்மா 151 இன்னிங்ஸ்களில் 4,231 ரன்களுடன் இதற்கு முன் இச்சாதனையைப் பதிவு செய்திருந்தார். ரோஹித், 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

உலக அளவில், மகளிர் டி20 ரன் குவிப்புப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் 175 இன்னிங்ஸ்களில் 4,717 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆடவர் டி20களில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 136 இன்னிங்ஸ்களில் 4,596 ரன்களுடன் முன்னிலையில் இருக்கிறார்.
மந்தனா சாதனை படைத்தபோதிலும், இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஷஃபாலி வர்மா மற்றும் மந்தனாவின் 46 ரன் தொடக்கத்திற்குப் பிறகு 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 33 பந்துகளில் 47* ரன்கள் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
பதிலுக்கு பேட் செய்த தென்னாப்பிரிக்கா, கேப்டன் லாரா வோல்வார்ட் 39 பந்துகளில் 51 ரன்கள் மற்றும் அனெரி டெர்க்ஸன் 34 பந்துகளில் 44* ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ஒரு பந்து மீதமிருக்க ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது. இந்திய பந்துவீச்சாளர்கள் 14 வைடுகள் உட்பட 14 கூடுதல் ரன்களை வழங்கினர்.ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா தற்போது 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. தொடரை சமன் செய்ய, இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதே மைதானத்தில் மோதவுள்ளன.


Click it and Unblock the Notifications