ஸ்மிருதி மந்தனா திருமணம் நிறுத்தம்.. கடைசி நிமிடத்தில் தந்தைக்கு மாரடைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்
சாங்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அவரது தந்தைக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்திலும், அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மிருதி மந்தனாவிற்கும், பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று (நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மகாராஷ்டிரா மாநிலம், சாங்லி மாவட்டத்தில் உள்ள சம்டோல் பகுதியில் அமைந்துள்ள அவர்களது பண்ணை வீட்டில் கோலாகலமாகத் திட்டமிடப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. சக கிரிக்கெட் வீராங்கனைகள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி அதிகமானதை அடுத்து, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் துஹின் மிஸ்ரா ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், "இன்று காலை உணவு வேளையில் ஸ்மிருதியின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நிலைமை மோசமடைந்ததால், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று கூறினார்.
திருமணம் ஒத்திவைப்பு
தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், திருமணத்தை நடத்துவது சரியாக இருக்காது என்று ஸ்மிருதி மந்தனா உறுதியாகத் தெரிவித்துள்ளார். "தந்தை முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பும் வரை திருமணத்தை நிறுத்தி வைப்பதாக ஸ்மிருதி முடிவு செய்துள்ளார். எனவே, இன்று நடக்கவிருந்த திருமணம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று மேலாளர் உறுதிப்படுத்தினார்.
சமீபத்தில்தான் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஸ்மிருதிக்கும், பலாஷ் முச்சலுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதே மைதானத்தில்தான் ஸ்மிருதி மற்றும் இந்திய மகளிர் அணி 2025-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸும் ஒரு முன்னாள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர் ஆவார். தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளும், ஆதரவும் தனது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, ஸ்மிருதியை உலகின் தலைசிறந்த வீராங்கனையாக மாற்றியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. ஸ்ரீனிவாஸ் மந்தனா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்களும், பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications