அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து 8வது முறையாக வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் காலை முதலே ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் சாரி பாகிஸ்தான் என்ற ஹேஸ் டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் அரசியல் பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் அணி உடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. ஆனால் icc தொடர்கள் மட்டும்தான் இரு அணிகளும் மோதிக் கொள்ளும். கடைசியாக 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக தான் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தது .இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு ஹைதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அகமதாபாத்துக்கு சென்ற பாகிஸ்தான் அணிக்கு பிசிசி ஐ தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு அங்கு இருந்த சில ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். மேலும் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றுள்ள போட்டியின் போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட்டு பாகிஸ்தான் அணி ரசிகர்களை வெறுப்பேற்றினர்.மேலும் பாபர் அசாம் பேசியபோது அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுத்தார்கள்.
இதேபோன்று பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி சென்ற போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை நோக்கி ஜெய்ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீ ராம் என கத்தினார்கள். இது சாதாரண ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில் அகமதாபாத்தில் நடந்து கொண்ட ரசிகர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக தற்போது சமூக வலைத்தளத்தில் சாரி பாகிஸ்தான் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
குறிப்பாக தமிழக ரசிகர்கள் பெரும்பாலானோர் இந்த ஹேஷ்டேக் முன் நின்று நடத்தி வருகின்றனர். மதத்தையும் கிரிக்கெட்டையும் கலக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்ததற்கு தாங்கள் இந்திய ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பலரும் டிவிட் செய்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அணி சென்னைக்கு வந்து இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது.
அப்போது பாகிஸ்தான் அணிக்கு பெருமளவில் உற்சாகம் கொடுப்போம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே சாதி பாகிஸ்தான் என்ற ஹேஸ்டாக் போட்டதற்கு வட இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானிடம் போய் மன்னிப்பு கேட்கிறீர்களே என்று அவர்கள் அதே ஹேஷ் டேகில் எதிர்ப்பு பதிவு செய்து வருகிறார்கள். எனினும் பாகிஸ்தான் அணிக்கு தமிழக ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.