“இன்னும் கொஞ்ச நாள் வெளியே உட்காரட்டும்”.. கே.எல்.ராகுலின் மோசமான ஃபார்ம்.. கங்குலி ஆதரவு குரல்!
டெல்லி: ஃபார்ம் அவுட் என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் கே.எல்.ராகுல் இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியம் எனவும், சுப்மன் கில் காத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா 2 - 0 என முன்னிலை வகித்து வரும் சூழலில் 3வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி நன்கு செட்டாகி இருந்தாலும், 3வது போட்டியில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தான் பெரும் குழப்பமாக இருந்து வருகிறது.

கே.எல்.ராகுலின் நிலைமை
தொடர்ச்சியாக ஃபார்ம் அவுட்டில் இருந்து வரும் கே.எல்.ராகுல் இந்த தொடரில் விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் படு மோசமாக சொதப்பினார். இதனையடுத்து அவரை துணைக்கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. இதன் மூலம் இனி கே.எல்.ராகுலை எந்தவித தயக்கமும் இன்றி ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கலாம். இதனால் அவரை அடுத்த போட்டியில் நீக்குவார்களா? இல்லையா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சவுரவ் கங்குலி ஆதரவு
இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக சவுரவ் கங்குலு குரல் கொடுத்துள்ளார். அதில், இந்தியாவில் ரன் அடிக்கவில்லை என்றால் அது சிக்கலான ஒன்று தான். ஆனால் கே.எல்.ராகுல் மட்டும் இதனை செய்யவில்லையே, பல வீரர்கள் இந்த சூழலில் இருந்துள்ளனர். வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பும், அழுத்தங்களும் ஏற்படுகின்றன. ஆனால் இறுதியில் கேப்டனும், பயிற்சியாளரும் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் இறுதியானது.

நம்பிக்கை உள்ளது
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே அதனை பூர்த்தி செய்யவில்லை என்றால் உடனடியாக விமர்சித்து விடுகின்றனர். கே.எல்.ராகுலுக்கு அதிக திறமைகள் உள்ளன. எனக்கு நம்பிக்கை உள்ளது. அதிக வாய்ப்புகளை அவருக்கு கொடுக்க கொடுக்க, அவர் நல்ல கம்பேக்கை கொடுப்பார். எனவே அவருக்கு வாய்ப்பு தர வேண்டும்.

கில்லின் வாய்ப்பு
சுப்மன் கில்லுக்கும் ஏற்றார் போன்ற நேரம் நிச்சயம் வரும். அவரும் நிறைய வாய்ப்புகளை பெறுவார். கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு சுப்மன் கில் எவ்வளவு முக்கியம் எனத்தெரிகிறது. இதனால் தான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் சற்று நிதானமாக இருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications