கொல்கத்தா : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் அதிரடி மாற்றத்தை செய்ய வேண்டியதில்லை என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பலரும் கேப்டன் ரோகித் சர்மாவையும் பயிற்சியாளர் டிராவிட்டையும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் அணியில் எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து கங்குலி பேசி இருக்கிறார்.

கங்குலி அளித்துள்ள பேட்டியில் இந்திய அணி ஒரு தோல்வி அடைந்ததற்காக நாம் எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை. இந்தியாவில் திறமைக்கு எந்த பஞ்சமும் இல்லை. அதேசமயம் விராட் கோலி, புஜாரா ஆகியோரை அணியில் இருந்து நீக்கவும் தற்போது அவசியம் கிடையாது. விராட் கோலிக்கு தற்போது 34 வயது தான் ஆகிறது.
இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீங்கள் பார்க்கக்கூடாது. உள்ளூர் கிரிக்கெட்டில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் ரன்களை சேர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் தான் உங்களால் அவர்களை கண்டறிய முடியும்.
ஜெய்ஸ்வால், ரஜத் பட்டிதார், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரெல்லாம் அதிக ரன்கள் அடித்து வருகிறார்கள். சகில் இளம் வீரராக இருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஆகியோர் எல்லாம் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கங்குலி கூறியுள்ளார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து தான் இப்போது யோசிக்கவில்லை என்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி என்னுடைய இடத்தை நான் வென்று விட்டு தான் அணிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.