“இவ்ளோ மோசமான செயல்பாட்டை பார்த்ததே இல்ல” மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய கங்குலி.. ரசிகர்கள் ஷாக்!
மும்பை: விராட் கோலியின் கேப்டன்சி விவகாரத்தில் மீண்டும் வாயை விட்டு கங்குலி சர்ச்சையை கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவின் 50 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதில் இருந்து உண்மை தகவலை அறிய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்த விராட், பிசிசிஐ தலைவர் கங்குலி மீது மறைமுக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

என்ன தான் பிரச்சினை
டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியபோதே, வேண்டாம் என பிசிசிஐ அதிகாரிகள் கோரியதாகவும், அதனை அவர் கேட்கவில்லை என்றும் கங்குலி கூறியிருந்தார். ஆனால் அப்படி யாருமே தன்னிடம் கோரவில்லை, ஒருநாள் அணியின் கேப்டன்சியில் கூட கடைசி நேரத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி பகிரங்கமாக கூறினார். இதனால் யார் கூறுவது பொய்? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

கங்குலி பதில்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பதிலளிக்கிறேன் என்று வந்த கங்குலி, மீண்டும் புது பிரச்சினையை கிளப்பியுள்ளார். முதலில் கோலியின் கருத்து குறித்து பேசிய கங்குலி, அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கூறினாலும் அது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை பி.சி.சி.ஐ. பார்த்து கொள்ளும், பி.சி.சி.ஐ. தக்க நேரத்தில் பதில் சொல்லும் என்று கூறினார்.

அவருக்கு தகுதி இருக்கு
தொடர்ந்து பேசிய அவர், ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு முழு தகுதியுடையவர். அவர் இதற்கு முன் செய்த சாதனைகள் அப்படி. 5 முறை மும்பை அணிக்காக கோப்பைகள், அழுத்தங்களை கையாளும் தகுதிகள் என சிறந்த கேப்டன் அவர். அதற்கேற்றார் போலவே நியூசிலாந்து தொடரை 3 - 0 என முடித்துக்கொடுத்தார். இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய சாதனைகளை அவரின் கேப்டன்சி மூலம் காணலாம்.

மோசமாக செயல்பாடு
உண்மையை கூற வேண்டும் என்றால், 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. குறிப்பிட்ட ஒருநாள் மட்டும் சரியாக அமையாததால் தொடரில் இருந்து வெளியேறியது. ஆனால் 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் சொதப்பியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா விளையாடிய மிக மோசமான ஆட்டம் இதுவே ஆகும். வீரர்கள் சுதந்திரமாக விளையாடாததே இதற்கு காரணம் என நினைக்கிறேன். 15 சதவீத நம்பிக்கையுடன் மட்டும் தான் விளையாடினார்கள் என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

சூடான ரசிகர்கள்
விராட் கோலியின் ரசிகர்கள் ஏற்கனவே கங்குலி மீது கோபத்தில் உள்ளனர். இப்படி இருக்க தற்போது வீரர்களுக்கு சுதந்திரம் இல்லை, ரோகித் சர்மாவுக்கு தான் அந்த திறன் உள்ளது போன்ற கருத்துக்களை கங்குலி கூறியுள்ளதால், ரசிகர்கள் மீண்டும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். எனினும் இந்த பிரச்சினை இதோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications