Ganguly Birthday: தோனி, விராட் கோலியால் கூட செய்ய முடியலை.. ஐசிசி தொடர்களில் கங்குலி தான் கெத்து!
சென்னை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிகரில்லா கேப்டனான சவுரவ் கங்குலி தனது 52வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார். இந்திய அணிக்காக 16 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய கங்குலி 18,575 ரன்களை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான தோனி, யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், சேவாக் உள்ளிட்ட பலரும் கங்குலியால் கண்டறியப்பட்டு உருவாக்கப்பட்டவர்கள். தோனி எப்படி இளம் வீரர்களுக்காக டாப் ஆர்டர் பேட்டிங் வாய்ப்பை விட்டுக் கொடுத்து கீழ் வரிசையில் விளையாடினாரோ, அதேபோல் கங்குலியும் சேவாக்கிற்காக மிடில் ஆர்டருக்கு மாறினார்.

இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி படைத்த சாதனைகள் பலரையும் மிரள வைத்துள்ளது. 1983 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் முதல்முறையாக சதம் விளாசினார். அதன்பின் 1987, 1991, 1996, 1999 என்று 4 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. 3 உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருந்த அசாருதீன் ஒரு சதம் கூட விளாசியதில்லை.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களிலும் இந்திய அணியின் எந்த கேப்டனும் சதம் அடித்ததில்லை. ஆனால் கங்குலி கேப்டனாக செயல்பட்ட உலகக்கோப்பை மற்றும் 2 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் மட்டும் 6 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 சதங்களை விளாசிய கங்குலி, 2002ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு சதம் விளாசியுள்ளார்.

அதேபோல் 2003 உலகக்கோப்பையில் மட்டும் 3 சதங்களை கங்குலி விளாசி இருக்கிறார். இதன்பின் ராகுல் டிராவிட், தோனி, விராட் கோலி ஆகியோர் தலைமையில் விளையாடிய 3 உலகக்கோப்பை தொடர்களிலும் இந்திய அணி கேப்டன் சதமடித்ததில்லை. அதேபோல் டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும் சதம் அடித்ததில்லை.
கங்குலிக்கு பின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னரே 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இதன் மூலமாகவே ஐசிசி தொடர்களை வெல்வதில் கங்குலி எவ்வளவு தீவிரம் காட்டினார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதேபோல் கேப்டன்சியை கைவிட்ட போதும், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மற்றும் தோனியின் தலைமைக்கு கீழ் விளையாடி கங்குலி அப்போதே சிறந்த தலைவன் என்பதையும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications