“இது உண்மை என்றால் கேப்டன்சியை ராஜினாமா செய்கிறேன்”.. பாகிஸ்தான் போட்டிக்கு முன் பதறிய கங்குலி
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி, மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாகவும், துணிச்சலாகவும் செயல்படக்கூடியவர். ஆனால், 2005 ஏப்ரல் 1-ஆம் தேதி, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முந்தைய நாள், சக வீரர்கள் செய்த செயலால் கங்குலி கேப்டன் பதவியையே ராஜினாமா செய்ய முன்வந்த சம்பவத்தை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் முக்கியமான போட்டி நடக்கவிருந்த நிலையில், இந்திய அணியினரிடையே நிலவிய பதற்றத்தைக் குறைக்க ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி ஒரு குறும்புத்தனமான திட்டத்தைத் தீட்டியது. கங்குலி தனது சக வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோரைப் பற்றி அவதூறாகப் பேசியது போல போலியான செய்தித்தாள் பக்கங்களை அவர்கள் தயார் செய்தனர். அதை கங்குலியிடம் காட்டி, "எங்களைப் பற்றி ஏன் பத்திரிகைகளில் இப்படி மோசமாக பேசினீர்கள்?" என்று யுவராஜ் சிங் கேட்டுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கங்குலி, தான் அவ்வாறு கூறவே இல்லை என்று மறுத்தார். இந்த நாடகத்தில் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரும் இணைந்து கொண்டு, "நீங்கள் இப்படி பேசியிருக்கக் கூடாது தாதா, இது தவறு" என்று கங்குலியிடம் கூறியுள்ளனர். மூத்த வீரர்களே கூறியதால் இந்த செய்திகள் உண்மைதான் என்று கங்குலி நம்பினார். கடும் அதிர்ச்சியடைந்த அவர், "நான் இவ்வாறு பேசியது நிரூபணமானால் என் கேப்டன் பதவியையே ராஜினாமா செய்யத் தயார்" என்று கூறி இருக்கிறார்.
அப்போது ஹர்பஜன் சிங் உட்பட 2, 3 வீரர்கள் தங்களது பைகளை தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறுவது போல நடித்தனர். இதனால் பதற்றமடைந்த கங்குலி, "நாளைக்கு பாகிஸ்தான் போட்டி இருக்கிறது, எங்கே போகிறீர்கள்?" என்று அவர்கள் பின்னால் ஓடிவந்து சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஒரு வீரர் சிரித்து விட்டதால் இது நாடகம் தான் என கங்குலி புரிந்து கொண்டார். அது தன்னை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட விளையாட்டு என்று தெரிந்ததும் கங்குலி நிம்மதி பெருமூச்சு விட்டார்.
தங்களுக்கு கங்குலி ஒரு அண்ணன் போல் இருந்ததால் தான் இந்த விளையாட்டை செய்ய முடிந்ததாகவும் வேறு கேப்டனாக இருந்தால் எங்களை வீட்டுக்கு போக சொல்லி இருப்பார்கள் எனவும் ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
