“பாகிஸ்தானை உலகுக்கு அடையாளம் காட்டியதே அவர்தான்..” இம்ரான் கானுக்காக கங்குலி உருக்கமான கோரிக்கை
கொல்கத்தா: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி குரல் கொடுத்துள்ளார்.
பாகிஸ்தானை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த ஒருவரை, அந்நாட்டு அரசு பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கங்குலி வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 15 முன்னாள் கேப்டன்கள் இம்ரான் கானை கவனித்துக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், கங்குலியும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

14 முன்னாள் கேப்டன்கள் கடிதம்
ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக அவரது வலது கண்ணில் 85 சதவீத பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்குச் சிறையில் உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் முன்னெடுப்பில், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட் உள்ளிட்ட 14 முன்னாள் சர்வதேச கேப்டன்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டு அறிக்கை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அனுப்பப்பட்டது. அதில் இம்ரான் கானுக்கு உரியச் சிகிச்சை மற்றும் சட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
கங்குலி ஆதரவு
இந்நிலையில், இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அவர் கூறுகையில், "முன்னாள் கேப்டன்கள் செய்தது மிகச்சரியான செயல். இம்ரான் கானின் உடல்நிலை விரைவில் தேற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்."
"முதலில் ஒரு கிரிக்கெட் கேப்டனாகவும், அதன்பின் ஒரு பிரதமராகவும் பாகிஸ்தான் நாட்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்குக் கொண்டு சென்றவர் இம்ரான் கான். அப்படிப்பட்ட ஒருவரைப் பாதுகாப்பது அந்த நாட்டின் கடமை. பாகிஸ்தான் அரசு அதைச் செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள் மௌனம்?
இந்தக் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்ட 14 பேரில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக அவர்கள் இதில் இணையவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த வாரம் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஷாகித் அப்ரிடி போன்ற வீரர்கள் தனிப்பட்ட முறையில் இம்ரான் கானின் உடல்நிலை குறித்துக் கவலை தெரிவித்திருந்தனர்.
1992ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த நாயகனான இம்ரான் கான், ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தற்போது கங்குலி, கபில் தேவ் போன்ற இந்திய ஜாம்பவான்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே சமயம், இம்ரான் கான் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என்றும், பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications