என்னப்பா இது.. ஆஸ்திரேலியா இப்படி சொத்தையா ஆடுது!! “வச்சு” சாதனை செய்த தென்னாபிரிக்கா
ஹோபர்ட் : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (நவம்பர் 11) அன்று நடைபெற்றது.
அந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சென்ற போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. எனினும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்று மீண்டும் ஒரு தொடரை இழந்துள்ளது.

மோசமான நிலையில் தென்னாபிரிக்கா
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்கத்தில் அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவை 15.3 ஓவர்களில் 55-3 என்ற மோசமான நிலையில் வைத்திருந்தது.

4வது விக்கெட்டுக்கு சேர்ந்த சூப்பர் ஜோடி
எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டு ப்ளேசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்து சாதனை செய்தது. இரண்டு வீரர்களும் சதம் அடித்தனர். தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்கள் குவித்தது.

தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவில் ஷான் மார்ஷ் 106 ரன்கள் எடுத்தார். ஸ்டோய்னிஸ் 63, கேரே 42, மாக்ஸ்வெல் 35 ரன்கள் எடுத்தனர். எனினும், அந்த அணி 42வது ஓவரில் 226 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து இருந்தது. கடைசியில் ஆடிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் ரன் வேகம் குறைந்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்கள் இழந்து இருந்தது. தென்னாபிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என கைப்பற்றியது.

பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து தன் ஆறாவது தொடர் தோல்வியை தழுவி உள்ளது. கடைசியாக 2016-17இல் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் தொடரில் 4-1 என வென்று இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் தன் மூன்றவாது தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது ஆஸ்திரேலியா. அடுத்து இந்தியாவுடன் இருதரப்பு தொடரில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனை செய்த கூட்டணி
இந்த போட்டியில் 252 ரன்கள் சேர்த்த மில்லர், ப்ளேசிஸ் ஜோடி உலகளவில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்ததில் மூன்றாவது இடத்தை பிடித்தது. தென்னாபிரிக்க அளவில் முதல் இடம் பிடித்தது. 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் இருக்கும் ஜோடி இந்தியாவின் அசாருதீன் - ஜடேஜா ஆவர். இவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4வது விக்கெட்டுக்கு 275 ரன்கள் குவித்து இருந்தனர். இரண்டாம் இடத்தில் இருப்பது யுவராஜ் - தோனி ஜோடி. இவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக 256 ரன்கள் எடுத்து இருந்தனர்.


Click it and Unblock the Notifications