அசமஞ்ச ஆட்டம்- 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி
அகமதாபாத்: 2 போட்டிகளில் வென்ற தெனாவெட்டில் இந்தியா அசமஞ்சமாக ஆடியதால் 3வது ஒரு நாள் போட்டியில், 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஒரு போட்டித் தொடரை வென்று விட்டால் உடனே மிதப்புக்குப் போய் விடுவது இந்திய கிரிக்கெட் அணியின் வழக்கமாகி விட்டது.
உடனே முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ரெஸ்ட் கொடுத்து விடுகிறார்கள். புதியவர்களை வைத்து ஆடவைக்கிரார்கள். இதனால் முழுமையான வெற்றியை அடைய முயற்சிக்காமல் ஒரு போட்டிதானே போனால் போகிறதென்ற மனப்பான்மை இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிகமாகவே உள்ளது.
அந்த அடிப்படையில் நேற்று தென்னாப்பிரிக்காவுடன் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் முன்னணி வீரர்கள் கிட்டத்தட்ட யாருமே இல்லாத நிலையில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் மோதியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 365 ரன்களைக் குவித்தது. அப்படியால் இந்தியாவின் பந்து வீச்சு எந்த அளவுக்கு சிறப்பானதாக இருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.
கல்லிஸ் 104 ரன்களையும், அப் டிவில்லியர்ஸ் 102 ரன்களையும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அம்லா 87 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆட வந்த இந்தியா 44.3 ஓவர்கள் வரை மட்டுமே களத்தில் இருந்தது. அதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 275 ரன்களில் சுருண்டு போய் விட்டனர்.
இந்தியத் தரப்பில் விராத் கோலி 57 ரன்களும், சுரேஷ் ரெய்னா 49 ரன்களும் எடுத்தனர். டோணி 9 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆகிக் கொண்டார். ரோஹித் சர்மா 48 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.
ஸ்டெயின், சோத்சோப் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்தியா ஏற்கனவே தொடரை வென்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் வென்று தென்னாப்பிரிக்கா ஆறுதல் தேடிக் கொண்டது.


Click it and Unblock the Notifications