பயமே இல்ல.. சேவாக் மாதிரி சதம் அடிக்கிறாரு.. கடைசி உலகக்கோப்பையில் தெறிவிக்கவிடும் தெ.ஆ. வீரர்!
லக்னோ: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தொடக்க வீரர் டி காக் 90 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் டி காக். டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் 30 வயதே ஆகியிருந்தாலும், 38 வயதானதை போல் உணர்வதாக கூறி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும், அதற்கான தேவை இருப்பதாக கூறினார்.

மற்ற வீரர்களை போல் தென்னாப்பிரிக்கா அணியின் இடஒதுக்கீடு முறையை குறை சொல்லி கோல்பாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், நேரடியாக வருமானத்தின் தேவையை கூறி ஓபனாக ஓய்வை அறிவித்தார் டி காக். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்காக கடைசி உலகக்கோப்பை தொடரில் டி காக் களமிறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
கடைசி உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய டி காக் சதம் விளாசி அசத்தினார். சிறிய மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால், எளிதாக சதம் விளாசினார் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டி காக் - பவுமா கூட்டணி களமிறங்கியது. கேப்டன் பவுமா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, டி காக் தனது பாணியில் சரியான கேப்பில் ரன்களை அதிரடியாக குவித்தார்.
51 பந்துகளில் அரைசதம் அடித்த டி காக், அதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாச தொடங்கினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய டி காக் 90 பந்துகளில் சிக்சர் அடித்து சதத்தை விளாசினார். உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து சதம் விளாசி டி காக் அசத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் டி காக் அடிக்கும் 19வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications