லண்டன்: தென் ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று சொதப்பித் தள்ளியதைப் பார்த்து அந்த நாட்டு ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
பேட்டிங்கிலும், பின்னர் பந்து வீச்சிலும் சொதப்பிய அவர்கள் ஒரு காமெடி ரன் அவுட்டையும் அரங்கேற்றினர்.
தென் ஆப்பிரிக்கா பேட் செய்து கொண்டிருந்தது. அது 29வது ஓவர். அந்த அணியின் ஸ்கோர் 142க்கு 3. மில்லர் ஒரு ரன்னுடனும், டூ பிளஸிஸ் 28 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அஸ்வின் பந்து வீசினார். அதை ஓங்கி அடித்த டூ பிளஸிஸ் பந்தை அடித்த வேகத்தில் ஓடத் தொடங்கினார். மறு முனையிலிருந்து மில்லர் வேகமாக ஓடி வந்தார். ஆனால் திடீரென பந்தை இந்திய பீல்டர் தடுத்ததைத் தொடர்ந்து டூ பிளஸில் யூ டர்ன் போட்டு கிரீஸுக்கே திரும்பினார். இதை மில்லர் எதிர்பார்க்கவில்லை.
கடைசியில் மில்லர் ரன் அவுட் செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் இந்த குப்பாச்சு குழப்பச்சைப் பார்த்து ரசிகர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.