செஞ்சுரியன் : கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சை செய்து இருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் ஜம்பா.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணி இதற்கு முந்தைய மூன்று போட்டிகளில் முதல் இரண்டில் வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவது போட்டியில் மோசமான தோல்வியை தழுவி இருந்ததால், அதற்கு பழி தீர்க்க இந்த முறை பந்துவீச்சில் கடும் தாக்குதலை வெளிப்படுத்தியது.
அதன் காரணமாக வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து தென் ஆபிரிக்கா அணியின் ரன் குவிப்பை தடுத்து விக்கெட் எடுக்க முனைந்தது. ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஸ்டோனிஸ், மைக்கேல் நேசர் மற்றும் நாதன் எல்லிஸ் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் 32வது ஓவர் வரை சிறப்பாக பந்து வீசி இருந்தனர். ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளரான ஆடம் ஜம்பா 5 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்திருந்ததால் அவருக்கு ஓவர் கொடுக்காமல் வைத்திருந்தார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். கூடுதலாக பகுதி நேர பந்துவீச்சாளர் கூட இல்லை. இதை உணராமல், ஜம்பாவை கடைசி 15 ஓவர் வரும் வரை பந்து வீச விடாமல் வைத்திருந்தார் மார்ஷ்.
அதன் விளைவாக சுதாரித்த தென் ஆப்ரிக்கா வீரர்கள் 33வது ஓவரில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஓவரில் இருந்தே தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்தனர். அடுத்து தன் ஓவர்களை வீசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பலியாடாக நடுவே ஆடம் ஜம்பாவுக்கும் ஓவர்கள் கொடுக்கப்பட்டது. துவக்கத்திலேயே சுழற் பந்துவீச்சை வெளுத்த தென் ஆபிரிக்கா இறுதி ஓவர்களில் வேடிக்கையா பார்க்கும்? ஜம்பா ஓவர்களில் ஃபோரும், சிக்ஸும் சரமாரியாக பறந்தன.
10 ஓவர்கள் முடிவில் ஆடம் ஜம்பா 113 ரன்கள் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காமல் பரிதாபமாக காட்சி அளித்தார். தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஹேசல்வுட் 79 ரன்களும், ஸ்டோனிஸ் 81 ரன்களும், நேசர் 59 ரன்களும், எல்லிஸ் 79 ரன்களும் கொடுத்து இருந்தனர். ஜம்பா மட்டும் செஞ்சுரி அடித்து 113 ரன்களை வாரி வீசி இருந்தார்.
இதற்கு முன் 2006இல் இதே ஆஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா இடையே நடந்த ஒருநாள் போட்டியில் 434 ரன்களை சேஸ் செய்து தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிக லெவிஸ் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 113 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். அதுவே இதுவரை ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான பந்துவீச்சு.
அதே போன்ற போட்டியில், அந்த சாதனையை சமன் செய்து மிக மோசமான பந்துவீச்சு பட்டியலில் முதல் இடத்தை லெவிஸ் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆடம் ஜம்பா. இவர் நல்ல பந்துவீச்சாளர் என்றாலும் இந்தப் போட்டியில் மோசமான சாதனை செய்ததை கண்டு ரசிகர்கள் பரிதாபப்பட்டு வருகின்றனர்.