கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா எதிர்கொண்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பௌவுமா பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குயின்டன் டி காக் வெறும் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

கேப்டன் பௌவுமா டக் அவுட் ஆனார். இதை போன்று இந்த தொடரில் அதிரடியாக விளையாடிய ஏய்டன் மார்க்கரம் 10 ரன்களில் ஆட்டம் இழக்க தென்னாப்பிரிக்க அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இதனால் ஆடுகளத்தின் சூழல் சற்று மாறியது.
இதனை பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஹென்றிச் கிளேசன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து தென் ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடுமையாக உழைத்த ஹென்ரிச் கிளாசன் 47 ரன்களில் வெளியேறினார்.இதில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காத நிலையில் டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 116 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். இதில் எட்டு பவுண்டரிகளும் ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 49.4 ஓவர் முடிவில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய தரப்பில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். 212 என்பது மிகவும் எளிய இலக்காக இருந்தாலும் உலகக்கோப்பை அரையிறுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 1999 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா 213 ரன்கள் எடுக்க அதனை தென்னாப்பிரிக்க அணி டை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது .