Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்! டி வில்லியர்ஸ் அதிரடி வீண்!!

ஆக்லாந்து: உலக கோப்பையில், தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள், ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் இன்று மோதின. டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

 South Africa won the toss and elected to filed

மிடில் ஆர்டர் தடுமாற்றம்

பாகிஸ்தானின் தொடக்க வீரர் சர்ப்ராஸ் அகமது 49, அகமது செஷாத் 18 ரன்கள், யூனிஸ்கான் 37 ரன்கள் எடுத்த நிலையில், சோயிப் மசூத் 8 ரன்களிலும், உமர் அக்மல் 13 ரன்களிலும் நடையை கட்டினர். பாகிஸ்தான் 40.1 ஓவர்களில் 197 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 40.1வது ஓவரில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது கேப்டன், மிஸ்பா 51 ரன்களுடனும், அப்ரிடி 11 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

மழையால் ஓவர்கள் சுருங்கியது

ஆரம்பத்தில் சிறப்பான ரன் ரேட்டை வைத்திருந்த பாகிஸ்தான், நடுவரிசை வீரர்கள் காலை வாரியதால், சறுக்கியது. கடைசி பத்து ஓவர்களில் மிஸ்பா, அப்ரிடி ஜோடி அடித்து ஆடி ரன்களை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும், தொடங்கப்பட்டது. எனவே, ஆட்டம் தொடங்கிய பிறகு எஞ்சியிருந்த 7 ஓவர்களிலும் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.

232 இலக்கு

அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில், மோசமான ஷாட்டுகளை அடித்த, அப்ரிடி 22 ரன்களிலும், மிஸ்பா உல் ஹக் 56 ரன்களிலும் நடையை கட்டினர். 46.2 ஓவர்களில் பாகிஸ்தான் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, டக்ஒர்த் லீவிஸ் முறையில், 47 ஓவர்களில் 232 என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது.

தென் ஆப்பிரிக்க பேட்டிங் சறுக்கல்

அந்த அணியின் தொடக்க வீரர் டி காக் வழக்கம்போல ஏமாற்றி, இம்முறை டக் அவுட் ஆனார். ஹசிம் ஆம்லா மற்றும் டு பிளெசிஸ் ஜோடி சிறப்பான பல ஷாட்டுகளை ஆடி, தென் ஆப்பிரிக்காவுக்கு நம்பிக்கை தந்தது. ஆனால் ஆம்லா, 38 ரன்களிலும், டுபிளெசிஸ் 27 ரன்களிலும் அவுட் ஆனதும், தென் ஆப்பிரிக்காவின் சறுக்கல் ஆரம்பித்தது.

அதிரடி வீரர்கள் ஏமாற்றம்

அதிரடி வீரர்களான ரிலீ ரோச்சவ் 6 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும், டுமினி 12 ரன்களிலும் நடையை கட்ட, பேட்டிங் வரிசை மொத்தமாக சீட்டு கட்டுபோல சரிந்தது. டுமினி அவுட் ஆனபோது, தென் ஆப்பிரிக்கா 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்திருந்தது.

டி வில்லியர்ஸ் மீண்டும் அபாரம்

ஆனால் மறுமுனையில், கேப்டன் டி வில்லியர்ஸ் நங்கூரம் போட்டு நின்று கொண்டிருந்தார். அவர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருந்தார். 32வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களை எட்டியது. மேற்கொண்டு 32 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், டி வில்லியர்ஸ் 77 ரன்களுடன் நின்றதால், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

அந்த ஷாட் தேவையா?

ஆனால் சொகைல் கானின் பந்து வீச்சை பிட்சை விட்டு இறங்கி வந்து டி வில்லியர்ஸ் அடிக்க முற்பட, பேட்டில் பந்து உரசியபடி விக்கெட் கீப்பர் சர்பாஸ் அகமது கைகளில் தஞ்சம் புகுந்தது. 200வது ரன்னுக்கு 9வது விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா. மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், இம்ரான் தாகிர் அவுட் ஆக, பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. தனிநபராக நின்று போராடிய டி வில்லியர்ஸ் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. நெருக்கடியான நேரங்களில் கோட்டைவிடும் அணி தென் ஆப்பிரிக்கா என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. 49 ரன்களை எடுத்ததுடன், 6 கேட்ச்சுகளையும் பிடித்த சர்பாஸ் அகமதுவுக்கு, மேன் ஆப் தி மேட்ச் தரப்பட்டது.

Story first published: Saturday, March 7, 2015, 14:45 [IST]
Other articles published on Mar 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+