லண்டன்: செப்.17, 2007.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அந்த நாளினை மறக்கவே முடியாது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி யுவராஜ் சிங் அசாத்திய சாதனையை படைத்தார். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யுவராஜ் சிங் அடித்த சிக்சர்களை ரசிகர்களின் நினைவில் இருந்து நீங்கவே நீங்காது. அதேபோல் யுவராஜ் சிங்கிற்கு பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராடையும் ரசிகர்கள் மறக்க மாட்டர்கள்.
6 பந்தில் 6 சிக்சர்களை விட்டுக் கொடுத்த ஸ்டூவர்ட் பிராட்டின் கிரிக்கெட் வாழ்க்கை அந்தப் போட்டியுடன் முடிவடைந்தது என்றே கருதினார்கள். அவ்வளவு ஏன், அந்தப் போட்டி முடிவடைந்த பின்னர் ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை நேரடியாக யுவராஜ் சிங்கை சந்தித்து, என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்து நிர்வாகம் பிராட்-ஐ அவ்வளவு எளிதாக கழற்றிவிடவில்லை. அதே ஆண்டின் இறுதியில் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டு வாய்ப்பு பெற்றார்.
முதல் சில போட்டிகளில் மோசமான செயல்பட்டாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் பிராட்-ற்கு மாற்றத்தை கொடுத்தது. அங்கிருந்து சூடுபிடித்த ஆட்டம் எங்குமே நிற்கவில்லை. குறிப்பாக 2015ஆம் ஆஷஸ் தொடரின் போது நாட்டிங்ஹாமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் ஸ்கோர்போர்டை கண்டால் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளையும் வெறும் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து வேட்டையாடினார்.

ஆஸி. அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களும் பிராட் ஸ்விங்கில் சரணடைந்து வெளியேறினார்கள். அதன் விளைவு, 4வது ஆஷஸ் போட்டியிலேயே இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஆண்டர்சனை போலவே இடதுகை பேட்டிங், வலதுகை பவுலிங் ஸ்டைலை கொண்டவர். பார்த்தால் பச்ச முகம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்டூவர்ட் பிராட் முகத்தில் பால் வடியும். பந்துவீச்சில் ஆக்ரோஷம் காட்டினாலும் முகத்தில் எந்த ஆக்ரோஷமும் தெரியாது.
ஒருகட்டத்தின் கிரிக்கெட்டின் கவர்ச்சிகரமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகிய ஸ்டூவர்ட் பிராட், முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரை பும்ராவை பார்த்தவுடன் மைக்கில் ஹோல்டிங், "I see a short Carreer" என்று குறிப்பிட்டார். பும்ராவின் ரன் அப்பையும், ஸ்டைலையும் பார்த்து கூறிய வார்த்தைகள் அவை. அவர் கூறிய போது, ஹோல்டிங்கை பலரும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அவர் சொன்னது போல் பும்ராவால் 75 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதே கடினம் தான்.
ஆனால் யுவராஜ் சிங்கால் சிக்சர்களால் பொளக்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட் 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 588 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே சாதனையாக பார்க்கப்படும் காலத்தில், வேகப்பந்துவீச்சாளராக 37 வயதிலும் 163 டெஸ்ட் போட்டிகளை கடந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார் பிராட். இன்றும் பிராட் பந்துவீசினால் ஆஸி. அணியின் இளம் வீரரும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களும் பிராட்டிற்கு பின் போர் வீரர்கள் போல் அணிவகுக்கிறார்கள்.
அதுதான் ஸ்டூவர்ட் பிராட் செய்திருக்கும் சாதனை. அதையெல்லாம் கடந்து யாரால் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசப்பட்டாரோ, அதே யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராடை ஜாம்பவான் என்று கொண்டாடி இருக்கிறார். மன அழுத்தம், பாதுகாப்பின்மை என்றெல்லாம் புதிய புதிய வார்த்தைகளால் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரச்சனை வரும் சூழலில், இது எதுவும் சரியாக உணரப்படாத காலத்திலேயே அனைத்து பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்து சாதித்து நிற்கிறார் பிராட்.