
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையே 2 டுவென்டி 20 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
மிகவும் திரில்லாக நடந்த இப்போட்டியில் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி, பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதுவரை இந்தியாவை, எந்த ஒரு சர்வதேச டுவென்டி 20 போட்டியிலும் பாகிஸ்தான் வென்றதில்லை. ஆனால் முதல் முறையாக, அதுவும் நம்ம ஊரில் வைத்தே நம்மை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
பேட்டிங்கில் சமீப காலமாக சொதப்பிக் கொண்டிருக்கும் இந்தியா நேற்றும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த இந்தியா 133 ரன்களை மட்டுமே குவித்தது. அதை அழகாக சேஸ் செய்த பாகிஸ்தான் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் பாகி்ஸ்தான் வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் நான்காவது பந்தில் சிக்ஸர் ஒன்றை அடித்து வெற்றி இலக்குக்கு பாகிஸ்தானை இட்டுச் சென்றார் அந்த அணியின் சோயப் மாலிக். இவர் சானியா மிர்ஸாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் முகம்மது ஹபீஸ் சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். சோயப் மாலிக் 50 பந்துகளில் 57 ரன்களைச் சேர்த்தார்.
இந்தியாவின் அறிமுகப் பந்து வீசசாளர் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார். 3விக்கெட்களை அவர் வீழ்த்தினார், வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்கள் கை கொடுக்கத் தவறி விட்டனர்.
முன்னதாக விளையாடிய இந்தியாவுக்கு அஜிங்கியா ரஹானேவும், கம்பீரும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து 77 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் அந்த ஜோடி பிரிந்த பிறகு இந்தியாவின் நிலை மோசமாகிப் போனது. அடுத்த 47 ரன்களைச் சேர்ப்பதர்குள் 9 விக்கெட்களை இழந்தது இந்தியா என்பதுதான் பெரிய சோகம்.
கம்பீர் 43 ரன்கள் எடுத்தார். ரஹானேவின் பங்கு 42 ஆகும். யுவராஜ் சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் தலா 10 ரன்கள் எடுத்தனர்.
மொத்தத்தில் நேற்றைய நாள் இந்தியாவுக்குப் பெரும் சோகமான நாள் என்பதில் சந்தேகமில்லை.