நேப்பியர்: நேப்பியர் டெஸ்டில் ரோஸ் டெய்லர், ரைடர் அதிரடியாக பேட் செய்ய, நியூசிலாந்து மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் இன்று நேப்பியரில் துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஜாகிர், இஷாந்த் கூட்டணி நியூசிலாந்து துவக்க வீரர்களை திணறடித்தது. மெஷின்டோஷ் 12 ரன்களுக்கு இஷாந்த் பந்தில் அவுட்டானார். சூப்பராக பந்துவீசிய ஜாகிர், குப்டில் (8), ஹவ் (1) ஆகியோரை வரிசையாக வெளியேற்றி அசத்தினார். இதையடுத்து நியூசிலாந்து 23 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.
இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ரோஸ் டெய்லர், ரைடருடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சதம் கடந்து அசத்தினர். ரோஸ் டெய்லர் 1 சிக்சர், 26 பவுண்டரியுடன் 151 ரன்கள் ஹர்பஜன் சுழலில் வெளியேறினார்.
நியூசிலாந்து 90 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்துள்ளது. ரைடர் 137, பிராங்கிளின் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.