லண்டன் ஒலிம்பிக்கில் தீவிரவாத தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்?-பிரிட்டன் உளவு நிறுவனம்

லண்டன் ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 216 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன், கடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் அதிர்ச்சி அடையும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது, அல்-கொய்தா அமைப்பு மூலம் லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரிட்டன் உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரிட்டனை சேர்ந்த எம்.ஐ.5 உளவு நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் ஜோனாதன் இவன்ஸ் கூறியதாவது,
விளையாட்டு போட்டிகளின் போது, தீவிரவாத தாக்குதல் நடத்துவது எளிதான காரியம் அல்ல. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவில்லை. இதனால் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறோம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் முறைகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளன. இதனால் நவீன தாக்குதல் முறைகளை நாம் எதிர்நோக்கி வாய்ப்புள்ளது. தீவிரவாத அமைப்புகள் தாக்குதலை நிறுத்தவில்லை. அதேபோல நாமும் அவர்களை தடுத்து நிறுத்துவதில் முன்னேற்றம் அடைந்து உள்ளோம்.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறியது. அதன்பிறகு அல்-கொய்தா அமைப்பினர் அங்கு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதன் பின்னணியில் சில அரபு நாடுகளும் உதவி வருகின்றன.
அல் கொய்தா அமைப்பில் தீவிரவாத பயிற்சி பெறுவதற்காக, இங்கிலாந்தில் இருந்து அதிகளவிலான நபர்கள் (ஜிஹதிஸ்) அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு லிபியா, எகிப்து, ஏமான், சோமாலியா போன்ற நாடுகளில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி, 100க்கும் அதிகமானோர் இங்கிலாந்தில் இருந்து சோமலியாவிற்கு தீவிரவாத பயிற்சிக்காக சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சிலர் தற்போது பயிற்சியை முடித்து கொண்டு தாக்குதல் நடத்த தயாராக உள்ளனர்.
ஏமான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் தீவிரவாத பயிற்சி மேற்கொண்ட நபர்கள், தற்போது மீண்டும் இங்கிலாந்திற்கு திரும்பி வந்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள், லண்டனில் உள்ள தெருக்கள், கார்கள், அடைக்கப்பட்ட அறைகள் ஆகியவற்றில் இருந்தவாறு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications