பாக். கிரிக்கெட் பயணத்தை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் கிரிக்கெட் பயணம் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. லாகூரிலும் அது விளையாடும் திட்டம் இருந்தது. இந்த நிலையில் இன்று லாகூரில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தனது பயணத்தை ஒத்தி வைத்து விட்டது ஆஸ்திரேலியா.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஷபாகத் நக்மி கூறுகையில், தங்களது பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தகவல் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரிவான அறிக்கையை வெளியிடும் என்றார்.
இதைத் தொடர்ந்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், மார்ச் -ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவதாக இருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய தொடருக்கான தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நசீம் அஷ்ரபும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் கிரேக் ஓ கானரும் துபாயில் அடுத்த வாரம் சந்தித்துப் பேசவுள்ளனர். அப்போது புதிய தேதி குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
கிரேக் ஓ கானர் கூறுகையில், உரிய நேரத்தில் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது குறித்து நாங்கள் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறோம். ஆனால் பாதுகாப்பு நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமான விஷயம். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னரே இந்த முடிவை எடுக்க நேரிட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம். விரைவில் இந்தத் தொடர் மாற்று தேதியில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்தத் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் தயங்கி வந்தனர். இதனால் ஆஸ்திரேலியா தொடரை ரத்து செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லாகூர் சம்பவத்தைக் காரணம் காட்டி தொடரை தள்ளிப் போட்டு விட்டது ஆஸ்திரேலியா.
கடந்த 2002ம் ஆண்டும் இதேபோல பாகிஸ்தான் வர மறுத்தது ஆஸ்திரேலியா. அப்போது இலங்கை மற்றும் ஷார்ஜாவில் இந்த தொடரைப் பிரித்து நடத்தியது பாகிஸ்தான். அதேபோல இப்போதும் செய்யலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறிப் பார்த்தது. ஆனால் அதற்கு ஆஸ்திரேலியா உடன்படவில்லை.
இந்த இக்கட்டான நிலையில் கை கொடுக்குமாறும், இந்திய அணியை அனுப்பி வைக்குமாறும் பாகிஸ்தான் கோரியது. ஆனால் அதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications