ஆஸி. இணையதள கருத்துக் கணிப்பில் ஹர்பஜனுக்கு ஆதரவு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது தவறில்லை. ஆஸ்திரேலிய அணியும், ரிக்கி பான்டிங்குமே இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நடுவர்களால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, பின்னர் இந்திய வீரர் ஹர்பஜன் இனவெறியுடன் நடந்து கொண்டதாக பொய் புகாரை ஐசிசியிடம் கூறி அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை வாங்கிக் கொடுத்தது.
ஆஸ்திரேலியாவின் இத்தகைய நடவடிக்கையை கண்டு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும், முன்னணி கிரிக்கெட் வீரர்களும் ஆஸ்திரேலியாவை குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய இணைய தளம் ஒன்றில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், எதிரணி வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கிண்டல் செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கு மற்ற வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை என 38 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நடுவர்களின் தவறான முடிவால் தான் வெற்றி பெற்றது என 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரிக்கியின் 'ட்ரிக்'
ரிக்கி பாண்டிங் தனது கேப்டன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கும், தன்னை சிறந்த ஆட்டக்காரராக காட்டிக் கொள்வதற்கும் சக வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்சை பலிகடாவாக்கி விட்டார் என்றும் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி சிட்னி கிரிக்கெட்டில் பெற்ற வெற்றியால், இதுநாள் வரை அவர்கள் முழுத்திறமையுடன் தான் விளையாடினார்களா அல்லது இதுபோன்று தவறான வழியில் தான் வெற்றியை பெற்றார்களா என்று பெரும்பாலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
ஒரு விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படி விளையாடுகிறார்கள் என்பது தான் முக்கியம். எங்களை பொறுத்தவரை இந்தப் போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெற்றது என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சைமண்ட்சுக்கு வாய்ப்பூட்டு:
இனவெறி விவகாரம் குறித்து இனிமேல் சைமண்ட்ஸ் எதையும் வெளியில் பேசக் கூடாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இனவெறி சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications