மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கிடையே மெல்போர்ன் நகரில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கடந்த புதன்கிழமை (26ம் தேதி) துவங்கியது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி ஹைடனின் அபார சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 343 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது ஆட்டத்தை திறம்பட வெளிப்படுத்தும் என்று காத்திருந்தவர்களின் ரசிகர்களின் முகத்தில் சச்சின், கங்குலி தவிர அனைவரும் கரியை பூசினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 71.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் இந்திய அணி வீரர்கள் 4 பேரை கேட்ச் செய்து அவுட்டாக்கினார்.
சச்சின் 62 ரன்களும், கங்குலி 43 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 147 ரன்கள் பின் தங்கியிருந்தது. பின்னர் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை துவக்கியது.
88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதனால் இந்தியா 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கியது.
2வது இன்னிங்சில் ஆமை வேக ஆட்டம் தான் நடந்து கொண்டிருந்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக் காரர்கள் வரிசையாக பெவிலியன் செல்வதில் குறியாக இருந்தனர். 20-20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி நாயகனாக திகழ்ந்த யுவராஜ் சிங் 2வது இன்னிங்சில் 5 ரன்களை மட்டும் எடுத்தார்.
இந்திய தரப்பில் கங்குலி 40 ரன்களும், வி.வி.எஸ்.லட்சுமணன் 42 ரன்களும் எடுத்தனர். ஆனால் டிராவிட், வாசிம் ஜாபர், சச்சின், யுவராஜ் சிங், டோனி உட்பட எவரும் சோபிக்காததால் இறுதியில் இந்திய அணி 74 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களை மட்டும் எடுத்தது.
இதனால் ஆஸ்திரேலியா 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 15வது டெஸ்ட் வெற்றியாகும். முதல் இன்னிங்சில் சதம் அடித்த மேத்யூ ஹைடன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிராவிட்டின் 'சாதனை':
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் முதல் இன்னிங்சில் 66 பந்துகளை சந்தித்து 5 ரன்களை எடுத்தார். 98 நிமிடங்கள் களத்தில் நின்று விளையாடிய டிராவிட் முதல் ரன்னை எடுத்ததே அவர் சந்தித்த 41வது பந்தில் தான்.
இவரின் சாதனை அத்துடன் விட்டதா இல்லை. 2வது இன்னிங்சில் 116 பந்துகளை சந்தித்து 16 ரன்கள் மட்டும் எடுத்தார்.
ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாடத காரணத்தால் திணேஷ் கார்த்திக்கை இப்போட்டியில் சேர்க்காமல் விட்டது இந்திய அணி நிர்வாகம். தொடக்க ஆட்டக்காரராக டிராவிட் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் ரன்களை எடுப்பதற்குப் பதில் பந்துகளை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications